சென்னை: ‘தமிழகம் கல்வியில் பெற்றுள்ள எழுச்சியை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் திரும்பி பார்க்கின்றன’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ‘கல்வியில் சிறந்த தமிழகம்’ கல்வி எழுச்சி கொண்டாட்ட விழா மற்றும் நடப்பு கல்வியாண்டுக்கான புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட அரசின் 7 திட்டங்களில் பயன்பெற்று, முக்கிய இடங்களில் பணியாற்றும் பயனாளிகள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் 2 லட்சத்து 65,318 பேர் பயன்பெறும் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து முதல்வர் பேசியதாவது: இந்த நிகழ்ச்சி எங்களை பாராட்டிக் கொள்ள அல்ல. உங்களை கொண்டாடுவதை பார்த்து, அடுத்து வரும் மணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தெலங்கானாவில் உள்ள நல்ல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். இதுதான் ஆரோக்கிய மான அரசியல். கல்வியால் அடுத்த தலைமுறை முன்னேறும். ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதி ஆட்கொண்டதால் நம் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. சென்னை மாகாண பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை நீதிக் கட்சி ஆரம்பித்தது. காமராஜர் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார். அது படிப்படியாக வளர்ந்து, காலை உணவு திட்டமாக உருவாகியுள்ளது.
ஒரு வேளை உணவு தருவதால், மாதம் ரூ.1,000 தருவதால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடும் என்று சிலர் நினைக்கலாம். காலை உணவு வந்த பின்னர் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. புதுமைப் பெண் திட்டத்தால் பிளஸ் 2 படித்தவர்களில் 75 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்கிறார்கள். தமிழகம் கல்வியில் பெற்றுள்ள எழுச்சியை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் திரும்பிப் பார்க்கின்றன. நம் திட்டங்களை அவர்களின் மாநிலங்களில் செயல்படுத்த திட்டம் வகுத்து வருகிறார்கள். இந்த எழுச்சிக்கு தடை ஏற்படுத்த மத்தியில் நினைக்கிறார்கள். நம் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு நாம் பயத்தை ஏற்படுத்த வேண்டும். கல்வியில் உயர்ந்த தமிழகத்தை உருவாக்குவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் தொலைநோக்கு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் நிறைவேற்றி வருகின்றனர். தமிழகம் கல்வியிலும் விளையாட்டிலும் தலைசிறந்த மாநிலமாக விளங்குகிறது. இங்குள்ள காலை உணவு, தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் பாராட்டுக்குரியவை. காலை உணவு திட்டத்தை தெலங்கானா மாநிலத்தில் அடுத்தகல்வியாண்டில் நடைமுறைப்படுத்த உள்ளோம்.
தமிழகத்தைப் பின்பற்றி தெலங்கானா அரசும், சமூக நீதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி, எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட இருக்கிறது. தெலங்கானாவில் கல்விக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். அங்கு ஆண்டுக்கு 1.10 லட்சம் பேர் பொறியியல் பட்டம் பெறுகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ‘யங் இந்தியா’ திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். விரைவில் விளையாட்டுக்கு அகாடெமி தொடங்க இருக்கிறோம். இதில் தமிழக மாணவர்களுக்கு முக்கிய இடம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அன்பில் மகேஸ், மதிவேந்தன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், திமுக எம்.பி. கனிமொழி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், கிரிக்கெட் வீரர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாழ்நாள் சாதனையாளர் விருது முன்னதாக விழாவில், இருளர் மக்களுக்காக பாடுபடும் பிரபா கல்யாணி, அரசுப் பள்ளிக்கு நிலம் கொடுத்த பூரணம்மாள், கல்விப்பணியாற்றி வரும் அகரம் அறக்கட்டளை ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
புதுமைப் பெண் திட்டம் குறித்து, பயன்பெற்று வரும் மாணவி பேச்சை கேட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் கண் கலங்கினார். அரியலூரைச் சேர்ந்த மணிவாசகன், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தனது தாய் ஒரு துப்புரவு பணியாளர் எனக் கூறியபோது, அவரது தாய் ஆற்றும் பணி ‘தூய்மைப் பணி’ என மாணவரின் சொல்லை திருத்திய முதல்வர், மருத்துவராக வாழ்த்துகளையும் தெரிவித்தார். புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெறும் மாணவி சுப்புலட்சுமி, முதுநிலை படிப்புக்கும் மாதம் ரூ.1000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேனாவை பரிசளித்தார்.