திருநெல்வேலி: “தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு, தமிழகத்தின் கடனில் ரூ.2 லட்சம் கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.
உலக நாடுகள் முழுவதும் 182 இடங்களில் திருவள்ளுவர் சிலைகளை அமைத்து தமிழ் மொழிக்கு தொண்டாற்றி வரும் விஜிபி உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசத்துக்கு நெல்லை பொதிகை தமிழ் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வி.ஜி.சந்தோசத்துக்கு வள்ளுவ சுடர்மணி என்ற விருதை சட்டப் பேரவை தலைவர் அப்பாவு வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களிடம் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு கூறியது: “பொள்ளாச்சி விவகாரத்தில் நடவடிக்கைகள் சரியாக இல்லை என திமுக உள்ளிட்ட அப்போதைய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து அரசின் மீது நம்பிக்கை இல்லாததை காட்டியதால் தான் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்கும்போது ரூ.4.5 லட்சம் கோடி கடன் இருந்தது. கடன் வாங்குவதற்கு மத்திய அரசு விதித்துள்ள விதிகளுக்குட்பட்டு தான் தமிழக அரசு கடன் வாங்குகிறது. கடன் வாங்கி உள் கட்டமைப்பை அரசு வலுப்படுத்திவருகிறது. பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. தமிழகத்தில் புதிய தொழில் தொடங்கப்பட்டதால் தான் இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழகம் 9.69 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக நிதி ஆயோக் கூறியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு புதிய தொழில்கள் தொடங்கப்பட்டதால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு வரை மத்திய அரசு 67 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடி கடன் வாங்கியது. பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் ரூ.126 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. மத்திய அரசு பிஹார், மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்கியும், அந்த மாநிலங்கள் வளர்ச்சி பெறவில்லை . மத்திய அரசு முறையாக நிதியை வழங்காத நிலையில்தான் தமிழகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கடன் வாங்கப்பட்டது.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.16 லட்சம் கோடி வரை மத்திய அரசு கடன் தள்ளுபடி செய்துள்ளது. கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொழிலதிபர்கள் 10 மடங்கு சொத்துகள் அதிகம் வைத்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதைபோல் தமிழகத்தின் கடனில் ரூ.2 லட்சம் கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்று வலுவான தலைவர்கள் இல்லை என்று பவன் கல்யாண் எந்த நோக்கத்தில் கூறினார் என்பது தெரியவில்லை. தமிழகத்தில் யார் வலுவான தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
பஹல்காம் பகுதிக்கு முப்படை பாதுகாப்பு உண்டு. ஆனால், அங்கு தாக்குதல் நடந்தபொழுது அங்கிருந்த அதிகாரிகள் 25 நிமிடம் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. மக்கள் அங்கே தவித்துக் கொண்டிருந்தார்கள். இது மத்திய அமைச்சகத்தின் பலவீனமா? பிரதமரின் பலவீனமா?. உள்துறை அமைச்சகத்தின் பலவீனமா என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.
தவெக தலைவர் விஜய் வெளி மாநிலங்களுக்கு சென்று வருவதற்காக பயன்படுத்தப்படும் தனி விமானம் மத்திய அரசு சார்பில் ஒரு தனியார் நிறுவனம் வழங்கி உள்ளது. அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. அமித் ஷா கட்டளைப்படி விஜய் பேசுகிறார்” என்று அவர் கூறினார்.
குடியரசு தலைவர் உச்ச நீதிமன்றத்தில் எழுப்பிய 14 கேள்விகள் குறித்து கேட்டதற்கு, “அரசியல் அமைப்பு சட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் சம உரிமை அடிப்படையில் அவர் கேள்வி எழுப்பி இருக்கலாம்,” என்று பதில் அளித்தார்.