தமிழகத்தில் கடலூர், ஆம்பூர் நகரங்களில் தமாகா நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துகளை மீட்க தமிழ்நாடு காங்கிரஸின் சொத்து மீட்புக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும், மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சார்பில் ஏராளமான சொத்துகள் உள்ளன. அவற்றின் மூலம் வாடகையாக கட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் வருகிறது. பல சொத்துகள் யாரிடம் இருகிறது என்றே தெரியவில்லை. சில சொத்துகள் தனியாருக்கு விற்கப்பட்டும் உள்ளது.
இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கடந்த 2017-ம் ஆண்டு முதல், காங்கிரஸ் சொத்து மீட்புக் குழுவை தேசிய அளவில் நியமித்து, காங்கிரஸின் பூர்வீக சொத்துகளை மீட்டு வருகிறது. தற்போது இதன் தலைவராக பஞ்சாப்பைச் சேர்ந்த விஜயேந்திர சிங் உள்ளார். தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கான பொறுப்பாளராக நிதின் கும்பல்கர் உள்ளார். தமிழகத்திலும் கடந்த 2017-ம் ஆண்டு சொத்து மீட்புக்குழு, ஜெ.எம்.ஆருண் தலைமையில் அமைக்கப்பட்டது. தற்போது இதன் தலைவராக முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளார்.
சொத்து மீட்புக்குழுவின் தமிழக பொறுப்பாளர் நிதின் கும்பல்கர் அண்மையில் தமிழகம் வந்து கடலூர் மற்றும் ஆம்பூரில் ஆய்வு செய்தபோது, காங்கிரஸின் சொத்துகளை தமாகாவினர் நிர்வகித்து வருவதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார். அதனைத் தொடர்ந்து அதை மீட்கும் நடவடிக்கை யில் குழு ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக சொத்து மீட்புக் குழுவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ஆம்பூர் மற்றும் கடலூரில் மாவட்ட காங்கிரஸ் பெயரில்தான் சொத்து வாங்கப்பட்டுள்ளது. அதை வேறு கட்சியினர் பயன்படுத்த முடியாது. ஏற்கெனவே வேலூரில் அப்படி காங்கிரஸ் சொத்து தமாகவினரிடம் இருந்தது. நீதிமன்ற வழக்கு மூலம் மீட்கப்பட்டது. அதேபோல், ஆம்பூர், கடலூரில் உள்ள இடங்களை மீட்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பட்டு ள்ளது. விரைவில் மீட்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.