சென்னை: விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளில், அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கொங்கு மக்கள் தந்த வரிப்பணம் மைசூர் நாட்டிற்கு ஏன் செல்ல வேண்டுமெனத் தடுத்துப் பணத்தைப் பறித்து ஏழை எளியோர்க்கு வழங்கிய வீரன் தீரன் சின்னமலை. அவனை அழிக்க முயன்ற ஆங்கிலேயரை 1801-இல் காவிரிக் கரையிலும், 1802-இல் ஓடா நிலையிலும், 1804-இல் அரச்சலூரிலும் ஆக மூன்று இடங்களில் எதிர்த்து வென்றார் வீரன் தீரன் சின்னமலை.
போரிட்டு வெல்ல முடியாத அந்த மாவீரனைச் சூழ்ச்சியால் கைது செய்த ஆங்கிலேயர் ஆடிப்பெருக்கு நாளில் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிட்டனர். அந்த மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாள் ஆடிப் பதினெட்டாம் நாள். அந்த மாவீரன் தியாகம் போற்றி கருணாநிதி 4.10.1998 அன்று சென்னை கிண்டியில் திறந்து வைத்த தீரன் சின்னமலையின் கம்பீரச் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘ எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம் என ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய ஓடாநிலைக் கோட்டையின் ஒப்பற்ற விடுதலைப் போராளி தீரன் சின்னமலையின் நினைவு நாள்.
சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே தோன்றி, நம் உரிமைகளில் எவர் கை வைத்தாலும் வெகுண்டெழுவோம் என்ற தன்மான உணர்வை இம்மண்ணில் விதைத்துச் சென்ற வீரப்பெருஞ்சுடரான தீரன் சின்னமலை அவர்களின் புகழ் ஓங்குக’ எனத் தெரிவித்துள்ளார்