தூத்துக்குடி: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் தன்கரை பதவி விலக வைத்து, வீட்டுக் காவலில் முடக்கி வைத்திருப்பது ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: குடியரசு துணைத் தலைவர் தேர்தலை பாஜக அரசு திணித்துள்ளது. ஏற்கெனவே குடியரசு துணைத் தலைவராக இருந்த தன்கரை பதவி விலகவைத்து, வீட்டுக் காவலில் முடக்கி வைத்துள்ளனர். குடியரசு துணைத் தலைவருக்கே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
தமிழர் ஒருவரை குடியரசு துணைத் தலைவராக்குவோம் என்று சிலர் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இது தமிழ்நாட்டுக்கான துணைத் தலைவர் பதவி அல்ல. இந்தியாவுக்கான துணைத் தலைவர் பதவி. எனவே, இதில் தமிழர் என்கிற அடையாளத்தை முன்னிறுத்துவதில் எந்தப் பலனும் கிடையாது. பாஜகவா அல்லது பாஜக அல்லாத ஜனநாயக சக்திகளா என்றுதான் அணுக வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கக் கூடிய ஒருவரை குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்ய வேண்டும். எனவே, சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவளிக்க கோரி விசிக சார்பில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளேன்.
தூய்மைப் பணியாளர்கள்… சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் தொடக்கத்தில் இருந்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். முதல்வரை சந்தித்து, தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளோம். அந்த தொழிலையே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக நிரந்தரப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் மாற்றுக் கருத்தை முன்வைத்தோம். அதைப் புரிந்துகொள்ளாமல், தூய்மைப் பணியாளர்களுக்கு எதிரான கருத்து என்று கூறுவது அதிர்ச்சியாக உள்ளது.
குறிப்பிட்ட சமூகத்தின் தொழிலாக தூய்மைப் பணியை நிரந்தரப்படுத்தி விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும். 31 நாட்கள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள் பதவியை பறிக்கும் புதிய சட்டம் மிகவும் கொடிய சட்டம்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.