சென்னை: 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் தனி மனைகளை வரன்முறைப்படுத்த ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்’ என்று நகர் ஊரமைப்பு இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2025-2026-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, “20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்” என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, அவ்வாறு தனி மனையாக வாங்கிய பொதுமக்கள், ஜூலை 1 முதல் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும், அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2026 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்து, 15.05.2025 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் அரசாணை வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 1 முதல் www.tcponline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அதேபோல், மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்துக்குப் பதிலாக www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 01.07.2025 முதல் 30.11.2025 வரை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.