மதுரை: மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம், தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு கடந்த காலத்தில் வெறும் ரூ.1-க்கு வாடகை விடப்பட்டுள்ளது” என்று மாநகராட்சி துணை மேயரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகராஜன் ‘பகீர்’ குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அவர் கூறியது: “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல் சிலவற்றை மட்டும் கூறுகிறேன். குளிரூட்டப்பட்ட திருமண மஹால் ‘ஏ’ கிரேடில் வரிவசூல் செய்யப்பட வேண்டும். ஆனால், ‘சி’ பிரிவில் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. பிபி.சாவடியில் உள்ள ஒரு பிரபலமான மஹாலுக்கு வரி வசூலில் 2,000 சதுர அடி உள்ளது. ஆனால், 15,000 ஆயிரம் வரை இருக்கும். இதேபோல் மதுரை முழுவதும் உள்ள திருமண மஹால்களை சரியாக அளந்து வரி விதிப்பு செய்தால் மாநகராட்சி வருவாய் பல கோடி ரூபாய் இழப்பு சரி செய்யப்படும்.
மதுரையின் மையத்தில் உள்ள ஒரு கருத்தரித்தல் மையத்திற்கு 6 மாதத்திற்கு ரூ.10 லட்சம் ஆண்டிற்கு 20 லட்சம் வரிவிதிக்கப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டில் இருந்து வரிவிதிக்க இந்த கட்டிடத்திற்கு உத்தரவு உள்ளது. ஆனால், 2018-ல் இருந்துதான் வரி விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு இந்த கட்டிடத்தில் இருந்து மட்டும் ரூ.1 கோடியே 20 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆல் இந்தியா டூரிஸ்ட் டெவெலப்மெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்படைத்த வணிக வளாகத்திற்கு வாடகை விடும் ஒப்பந்தத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்று உள்ளது. ரயில்வே நிலையத்திற்கு மட்டும் விரிவிலக்கு உள்ளது. ஆனால், ரூ.4 கோடி வரை வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணாபுரம் காலனி செல்லும் வழியில் மாநகராட்சி இடம் சுமார் 2 ஏக்கர் கடந்த காலத்தில் தனியார் பள்ளி நிரவாகத்துக்கு வெறும் ரூ.1-க்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதேபோலவே மாநகராட்சிக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள இடம் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. அதை மீட்க வேண்டும். வரிவிதிப்பு விவகாரத்தில் மோசடி நடந்ததாக ஒட்டுமொத்த 5 மண்டல தலைவர்களையும் திமுக ராஜினாமா செய்ய வைத்தது வரவேற்க தக்க நடவடிக்கையாகும். வரி மோசடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கான விசாரணை, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சொத்துவரி முறைகேட்டில் கடைநிலை ஊழியர்கள் முதல் உயர் மட்ட அதிகாரிகள் வரை, அவர்களை இயக்கிய அரசியல் வாதிகள் அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து திருமண மஹால்கள், ஏசி மால்கள், ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், லாட்ஜுகள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள், சுயநிதி கல்லூரிகள் ஆகியவற்றை முழுமையாக அளவீடு செய்ய வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான ஓஎஸ்ஆர் இடம் பட்டா பெயர் மாற்றப்படாமல் தனியாருக்கு விற்பனை செய்து கோடிக்கணக்கில் முறைகேடு நடந்தள்ளது.
முறையாக ஆய்வு செய்து மாநகராட்சி சொத்துகளை மீட்க வேண்டும். யார் யாருக்கு என்ன அளவு, என்ன விதி விதிக்கப்பட்டள்ளது என்பதை பொதுமக்கள் அனைவரும் வெளிப்படை தன்மையோடு பார்க்க வெப்சைட்டில் விவரங்களை வெளியிட வேண்டும். பெரிய நிறுவனங்களுக்கு குறைத்து வரிவிதிப்பு செய்யப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.