சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரின் பரிந்துரையை பரிசீலிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் தாக்கல் செய்த மனுவில், 1994-ம் ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கபட்டது. ஆனால், அந்த உத்தரவை அமல்படுத்தாமல் தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்கபட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து கடந்த 2021-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிரந்தர அங்கீகாரம் வழங்கும் வகையில் 1994-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கு பதிலாக நிரந்தர அங்கீகாரம் வழங்கும் அரசாணையை, எந்தக் காரணமும் தெரிவிக்காமல் அரசு திரும்பப் பெற்று கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன்பிறகு, 2024-ம் ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இது சட்ட விரோதமானது, இதுபோல குறிப்பிட்ட கால வரம்பு நிர்ணயிக்க எந்த அவசியமும் இல்லை என்பதால் நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரி கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நீண்ட காலமாக இயங்கக் கூடிய பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் தனியார் பள்ளிகள் இயக்குநர் அளித்த பரிந்துரையை பரீசீலித்து நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக தகுந்த உத்தரவு பிறப்பிக்க கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன்ல், கல்வித்துறை செயலாளர் மற்றும் தனியார் பள்ளி இயக்குநர் ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். இதேபோல, கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், ஆரம்ப பள்ளிகளை, நடுநிலை பள்ளியாக உயர்த்துவது தொடர்பாக அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி குமரப்பன், ஆகஸ்ட் 22-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.