தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை இரண்டு ஆண்டுகளில் காலி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்து கட்டிடத்தை ஒப்படைக்கக் கோரி, உரிமையாளர்களான, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்திரி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
மனுவில், மாதம் 10 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் வாடகை நிர்ணயித்து, 2022ம் ஆண்டு ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும், ஒப்பந்தப்படி வாடகை வழங்காமல், பொதுப்பணித் துறை வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், மாதம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 438 ரூபாய் வாடகையாக நிர்ணயித்து, 2022 ஜனவரி முதல் நவம்பர் வரைக்கும் 82 லட்சத்து 16 ஆயிரத்து 824 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்துக்கு மாறாக வாடகை நிர்ணயித்ததால் மாதத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்ததாகவும், குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்த நிலையில், எந்த ஒப்பந்தமும் இல்லாமல் கட்டிடத்தை பயன்படுத்தி வருவது சட்டவிரோதம் என்பதால், அதனை காலி செய்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கட்டிடத்துக்கான வாடகையை 6 லட்சம் ரூபாயில் இருந்து 13 லட்சம் ரூபாயாக அதிகரித்து உத்தரவிட்டார். இந்த கூடுதல் தொகை 2.18 கோடி ரூபாயை 2025 டிசம்பர் 31ம் தேதிக்குள் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இரண்டு ஆண்டுகளில் கட்டடத்தில் இருந்து காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.