மாநகராட்சி நிர்வாகத்தில் அதிகம் தலையீடு செய்வதாக ஏற்பட்ட குற்றச்சாட்டில் கட்சியில் இருந்து கணவர் நீக்கப்பட்ட நிலையில், மேயர் இந்திராணி, உள்ளூர் அமைச்சர்கள், மாநகர மாவட்டச் செயலாளர், ஆளும்கட்சி கவுன்சிலர்கள் ஆதரவில்லாமல் தனித்துவிடப்பட்ட நிலையில் உள்ளார்.
மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக 67 வார்டுகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. மதுரை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிபாரிசு அடிப்படையில் 57-வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திராணி மேயரானார். இதனால் மேயர் பதவியை எதிர்பார்த்த திமுக முக்கிய நிர்வாகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதனால், தொடக்கம் முதலே மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மோதல் நீடித்து வந்தது. கட்சித் தலைமை அடிக்கடி திமுக கவுன்சிலர்களை அழைத்து சமாதானம் செய்த போதும், தற்போது வரை மேயருக்கும், ஆளும் கட்சி கவுன்சிலர்களுக்கு மான பனிப்போர் தீர்ந்தபாடில்லை.
இந்நிலையில் மேயர் இந்திராணி தன்னிச்சையாக செயல்படாமல் தனது கணவர் பொன் வசந்த் கட்டுப் பாட்டில், அவரது வழிகாட்டுதல் அடிப்படையிலே செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வந்தது. மாநகராட்சி அதிகாரிகளில் பலரும் மேயர் கணவரின் ஆலோசனைகளை யும், உத்தரவுகளையும் கேட்டே நிர்வாகப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவு இருந்ததால் மேயர் இந்திராணி மீதான எந்த குற்றச்சாட்டுகளுக்கும் கட்சித் தலைமை செவி சாய்க்கவில்லை.
அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் ஆதரவாளர் என்ற போர்வையில், அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் பொன்வசந்த் தப்பித்து வந்தார். பொன்வசந்த் மீதான குற்றச்சாட்டுகளால் அதிருப்தியடைந்த பழனிவேல் தியாகராஜனும் அவரை கைவிட்டதால் கட்சித் தலைமை அதிரடியாக பொன்வசந்தை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுத்தது. மாநகராட்சி விவகாரங்களிலும் அவர் தலையிடக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், ”மேயர் இந்திராணியின் ஆரம்ப கால செயல்பாடுகளு டன் ஒப்பிடும்போது, தற்போது மாநகராட்சி கூட்டங்களில் ஒரளவு சிறப்பாகவே செயல்படுகிறார். சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வந்து மாமன்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கும்போது அவருக்கு பதிலடி கொடுத்து மேயர் இந்திராணி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தார். ஆனாலும், தொடர்ந்து மாநகராட்சி கூட்ட தேதிகளை முடிவு செய்வது, கூட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதில் தொடங்கி கூட்டத்தின் இடையே அவரது கணவர் அனுப்பும் ‘துண்டுச் சீட்டு’ விவரங்கள் அடிப்படையிலேயே மாநகராட்சி கூட்டங்களையும் நடத்தி வந்தார்.
கடைசியாக நடந்த மாநகராட்சி கூட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலினை வருகை குறித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்திய நாளில் வைத்ததும், அதிமுக கவுன்சிலர்களுடன் இணைந்துதீர்மானங்களை நிறைவேற்றியதுமே, மேயரின் கணவர் பொன் வசந்த் நீக்கத்துக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த காலத்தில் மேயர் இந்திராணி, அமைச்சர் பி.மூர்த்தி நிகழ்ச்சிகளில் தலைகாட்ட மாட்டார். தற்போது அமைச்சர் பி.மூர்த்தி நிகழ்ச்சிகளில் முதல் ஆளாக வந்து நிற்கிறார். அதுபோல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்கிறார்.
ஆனால், 2 அமைச்சர்களுக்கும் மேயர் இந்திராணி, அவரது கணவர் பொன்வசந்த் மீது பெரிய நம்பிக்கையில்லை. இரு அமைச்சர்கள், பெரும்பான்மை ஆளும்கட்சி கவுன்சிலர்கள், மாநகர திமுக மாவட்டச் செயலாளர் தளபதி போன்ற அனைவர் ஆதரவும் இல்லாமல் தற்போது இந்திராணி தனித்துவிடப் பட்டுள்ளார். கணவர் பொன்வசந்த் நீக்கத்திற்குபிறகு, தற்போது இந்திராணிக்கு மேயராக தனித்துவமாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் மீதமுள்ள ஆண்டுகளில் தன்னுடைய ஆளுமையையும், கணவர் தலையீடு இல்லாத தனது சுதந்திரமான நிர்வாக திறன்களையும், செயல்பாடுகளையும் வெளிப்படுத்தலாம். அதன் அடிப்படையில் அவரது கணவர் மீண்டும் திமுகவில் சேர்க்கப்படவும், கட்சியிலும் இவர்கள் விட்ட இடத்தை பெற முடியும். அதுவரை மாநகர திமுகவின் பலமுனை சவால்களையும் அவர் சமாளிக்க வேண்டும். மாநகராட்சியின் அடுத்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் மேயருக்கு எந்த அளவு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பதும் கேள்விக்குறியதாகவே இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.