ரயில்வே தண்டவாளம், ரயில் பெட்டிகளில் குறைபாடு, உபகரணங்கள் செயலிழப்பு, மனித தவறுகளால் பிரதான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்துக்களை தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பினார். அதில் விபத்துக்கள் எண்ணிக்கை, முதன்மை காரணங்கள், இழப்பீடு விவரம், முன்னெச்சரிக்க நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்: “பயணிகள் பாதுகாப்பை பிரதான இலக்காக கொண்டு செயல்படும் இந்திய ரயில்வே, இதுவரை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளால் 2004 – 14-ம் ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுதோறும் 171 விபத்துகள் ஏற்பட்ட நிலையிலிருந்து 2024-25-ம் ஆண்டில் 31 என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளம், ரயில் பெட்டிகளில் குறைபாடு, உபகரணங்கள் செயலிழப்பு, மனித தவறுகளால் பிரதான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 2020-21 முதல் 2024-25-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் இதுவரை ரூ.39.83 கோடி ரயில் விபத்துகளால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு கருணைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளன. இழப்பீட்டுத் தொகையாக ரூ.30.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு 2024-25-ம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 14,022 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டில் ரூ. 1 லட்சத்து 16,470 கோடி செலவிடப்படலாம் என கணிக்கப்பட்டுளள்து.
கடந்த ஜூன் 30-ம் தேதி வரை 6,635 ரயில் நிலையங்களில் இன்டர்லாக்கிங் பொறிமுறை பாதுகாப்பு வசதிகள் மற்றும் அதற்கான சிக்னல்கள் அமைக்கப்பட்டு மனிதத் தவறுகளால் ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. மேலும் 11,096 லெவல் கிராசிங்குகளில் இன்டர் லாக்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 6,640 ரயில் நிலையங்களில் மின்சார சுற்றுகள் மூலம் தண்டவாள கண்காணிப்பு வசதிகள் உருவாக்கப் பட்டுள்ளன. உச்சபட்ச பாதுகாப்பு தொழில்நுட்பமான “கவச்” அம்சம் 1,548 கி.மீ. தொலைவுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அகல ரயில் பாதைகளில் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு முன்பாக அகற்றப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளங்கள் இணைய வழியிலும் ரயில்வே ஊழியர்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு குறைபாடுகளை கண்டறியும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காவல் துறை மாநிலப் பட்டியலில் வருவதால் ரயில்வே காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து 2020-24 ஆண்டு வரை அடையாளம் தெரியாத பொருட்களை தண்டவாளத்தில் வைத்ததற்காக 277 வழக்குகள் பதியப்பட்டு 348 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தண்டவாளங்களை சேதப்படுத் தும் முயற்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் சிறப்பு குழுக்கள் நியமிக்கப் பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.