சென்னை: மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக காவிரியில் திறக்கப்பட்டு அதிகளவில் கடலில் கலக்கிறது. இப்படி நடவாது தடுத்தால் மட்டுமே 85 ஏரிகளும், குளங்களும், நீர் நிலைகளும் காப்பாற்றப்படும். இதில் தமிழக அரசு உரிய தீர்வு காண பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி – பூதலூர் பகுதிகளில் வறண்டு நிற்கும் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, விவசாயிகள் ‘மினியன்’ ஏரியில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.
விவசாயி ஜீவகுமார், ஏரி மேம்பாட்டுக்குழு சார்பில் ரவிச்சந்திரன், மேனாள் பஞ்சாயத்து தலைவர் கமலதாசன் உள்ளிட்டோர் தலைமையில் விவசாயிகளும், ஊர் பொதுமக்களும் இங்கே ஓரணியாய் போராடியுள்ளனர்.கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் சென்று கடலில் வீணாய் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டியே அனைவரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் செங்கிப்பட்டி – பூதலூர், புதிய கட்டளைமேட்டு வாய்க்கால் மூலம் 61 ஏரிகளும், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் 24 ஏரிகளும் நிரப்பப்பட்டு பாசனத்துக்கு பயன்படுத்தப் படுகிற அதே வேளையில்தான்; செங்கிப்பட்டி மற்றும் பூதலூர் பகுதிகளிலுள்ள ஏரிகள், குளங்கள் வறண்டுபோய் கிடக்கிறது.கல்லணைக்கு மிக அருகிலுள்ள ஏரி, குளங்களே இந்த நிலையில்தான் உள்ளது.
புதிய கட்டளைமேட்டு வாய்க்கால், உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் 30 ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக பாசனவசதி கிடைத்து வருவதை நினைத்து மகிழ்வதா; மேட்டூர் அணைக்கு வருகிற நீர், உபரி நீராக காவிரியிலும் – முக்கொம்பு அணையிலிருந்து கொள்ளிடத்திலும் திறக்கப்பட்டு மொத்த நீரும் கடலில் போய் கலப்பதை எண்ணி வேதனைப்படுவதா தெரியவில்லை.
செங்கிப்பட்டி – பூதலூர் பகுதிகளில் வறண்டுபோய் கிடக்கும் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து எப்போதுதான் என்று விவசாயிகளும், பொதுமக்களும் ஏங்கிக் கிடக்கிறார்கள்.உபரி நீரை மாயனூர் கதவணையில் திருப்பி புதிய கட்டளைமேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலமாக சுற்றுப்பகுதிகளில் இருக்கிற ஏரி – நீர்நிலைகளை நிரப்பிட தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். வருகிற காலங்களில் மாயனூர் கதவணையில் தண்ணீரை திறக்கும் நிலை உண்டானால் மட்டுமே உபரிநீர் கடலில் கலப்பது குறையும்.
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக காவிரியில் திறக்கப்பட்டு அதிகளவில் கடலில் கலக்கிறது. இப்படி நடவாது தடுத்தால் மட்டுமே 85 ஏரிகளும், குளங்களும், நீர் நிலைகளும் காப்பாற்றப்படும். தமிழக முதல்வர் இதில் உரிய தீர்வு காண விரைந்து முன்வர வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.