சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.84 ஆயிரத்தை நெருங்கியது. பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.83,440 என்ற புதிய உச்சத்தை பதிவு செய்தது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
கடந்த 20-ம் தேதி தங்கத்தின் விலை ரூ.82,320 ஆக உயர்ந்து,புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.83 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.83,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. விரைவில் ரூ.84 ஆயிரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.140 உயர்ந்து, ரூ.10,430-க்கு விற்கப்பட்டது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.91,024 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ரூ.148 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.1.48 லட்சமாகவும் இருந்தது.
தங்கம் விலை உயர்வால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தக்குமார் கூறுகையில், “அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனால், வங்கியில் வைப்பு வைத்திருந்தோர் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவற்றால், தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயரவே வாய்ப்பு உள்ளது” என்றார்.