மதுரை: “மக்களைக் காக்கிற காவல் துறையின் டிஜிபி பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு சென்று விட்டது. தகுதி வாய்ந்த டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று நாம் சொல்லியும் கூட திமுக அரசு கேட்கவில்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தின் நான்காம் கட்டத்தின் முதல் நாளான இன்று திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட 16 கால் மண்டபம் அருகே கூடியிருந்த மக்கள் மத்தியில் இபிஎஸ் பேசியது: “ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மண்ணில் பேசுகிறேன். அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் போட்டியை நடத்தினார்கள். ஆனால், திமுக அரசு ஜல்லிக்கட்டுப் போட்டியை கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது.
ஜல்லிக்கட்டு டோக்கன் வழங்குவதிலும் லஞ்சம், ஊழல் செய்கிறது இந்த திமுக அரசு. அதிமுக அரசு அமைந்ததும் முன்பு எப்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தது போலவே மீண்டும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஜல்லிக்கட்டு காளைக்கு சிலை அமைக்கக் கோரிக்கை வைத்துள்ளீர்கள், அதிமுக ஆட்சி அமைந்ததும் கண்டிப்பாக சிலை அமைக்கப்படும்.
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. குடிநீர் வரி, கடை வரி, குப்பை வரியிலும் முறைகேடு செய்திருக்கிறார்கள். இதை நாம் சொல்லவில்லை. அரசு நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளது, அதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேயரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேயரின் ஒத்துழைப்பு இல்லாமல் முறைகேடு நடந்திருக்க முடியாது. எனவே, மதுரை மேயர் கைது செய்யப்பட வேண்டும். மதுரை மேயரைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது. அதிமுக அரசு வந்தவுடன் முழு விசாரணை நடத்தி, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பல மாநகராட்சிகளில் ஊழல் செய்த பணத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறார்கள். காஞ்சிபுரம், நெல்லை, கோவையிலும் இவ்வாறு நடந்துள்ளது. மற்ற நகர்ப்புற பகுதிகளிலும் ஊழல்கள் நடந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டம் – ஒழுங்கு டிஜிபி ஓய்வு பெற்றுவிட்டார். 3 மாதத்துக்கு முன்பாக புதிய டிஜிபிக்கள் பட்டியல் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அந்த பட்டியலில் இருந்து மூன்று பேரை பரிந்துரைப்பார்கள். அந்த மூவரில் இருந்து ஒருவரை மாநில அரசு தேர்வு செய்து டிஜிபியாக அறிவிக்க வேண்டும். இதுதான் சட்டம். இந்த பதவியைக் கூட உரிய நேரத்தில் நியமிக்க முடியாத, கையாலாகாத அரசு திமுக அரசு. புதிய டிஜிபி தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. 8 டிஜிபிக்கு பிறகு 9-வது டிஜிபியாக இருப்பவர் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. இந்த நிலையில் குறித்த காலத்தில் டிஜிபி நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஓய்வுபெறும் நாள் இந்த அரசுக்கு முன்பே தெரிந்தும், திட்டமிட்டு தங்களுக்கு வேண்டப்பட்டவரை நியமிப்பதற்காக சட்டப்படி நடந்துகொள்ளவில்லை. இதனால், தகுதியுள்ள 8 டிஜிபிக்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு ஒரு டிஜிபி, தீயணைப்புத் துறைக்கு ஒரு டிஜிபி என 8 டிஜிபிக்களுக்கும் ஒவ்வொரு பொறுப்பு உள்ளது. அப்படி பொறுப்புமிக்க 8 டிஜிபிக்கள் விழாவில் பங்கேற்கவில்லை என்றால் இந்த அரசு எப்படி நடக்கும்? காவல் துறையிலேயே சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டை ராணுவம் பாதுகாக்கிறது, மக்களை காவல் துறை பாதுகாக்கிறது. மக்களைக் காக்கிற காவல் துறையின் டிஜிபி பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு சென்றுவிட்டது. தகுதி வாய்ந்த டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று நாம் சொல்லியும் கூட திமுக அரசு கேட்கவில்லை.
ஸ்டாலின் இப்போது வெளிநாடு போயிருக்கிறார். இந்த முறையும் சைக்கிள் ஓட்டாமல் இருந்தால் சரி. அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை முதலீட்டாளர் மாநாடு நடத்தி பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு, லட்சக்கணக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 10 லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. திமுக அரசும் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது, அது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டோம், இதுவரை கொடுக்கவில்லை. தொழிற்துறை அமைச்சர் பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன என்கிறார், பிறகு ஏன் வெள்ளை அறிக்கை கொடுக்கவில்லை..?
எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று ஸ்பூனில் சாப்பிட்டதை பெரிதாக நினைக்கிறார் என்று அமைச்சர் ராஜா பேசுகிறார். ஆம், நான் ஸ்பூனில் சாப்பிட்டதை பெரிதாகத்தான் நினைக்கிறேன். ஏனென்றால் நானெல்லாம் ஒரு விவசாயி. உங்கள் அப்பா மத்திய மந்திரி என்பதால் நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்கிறீர்கள். உங்கள் தலைவரின் அப்பா முதல்வராக இருந்தவர். அதனால் நீங்கள் எல்லாம் தங்க ஸ்பூனிலும், வெள்ளித் தட்டிலும் சாப்பிடலாம். நான் மக்களோடு மக்களாக இருந்து வந்தவன், எனக்கு கையில் எடுத்து சாப்பிடத்தான் தெரியும்.
எவ்வளவு திமிர் இருந்தால் இப்படிப் பேசுவார்..? நாம் எல்லோரும் ஸ்பூனிலா சாப்பிடுகிறோம்? கையில் சாப்பிடுவதற்கே சாப்பாடு கிடைக்காமல் மக்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள், அதற்காகத்தான் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. மக்களுடைய பிரச்சினை தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இப்படியெல்லாம் விமர்சனம் செய்தால் உங்களுக்கு அடுத்தாண்டு தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது.
மக்கள் வேலைக்காக, உணவுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அம்மா உணவகத்தை கூட மூடப்பார்க்கிறார்கள். முழுமையாக பொருட்கள் கொடுப்பதில்லை, ஊழியர் எண்ணிக்கை குறைத்தனர். இவர்களா ஏழை மக்களைக் காப்பாற்றுவார்கள்?
2011-க்கு முன்பு திமுக ஆட்சியையும், 2011-க்கு பின் அதிமுக ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். இன்று போதை பொருள் விற்காத இடமே இல்லை. போதை பொருள் தாராளமாகக் கிடைக்கிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள், நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. அதனால் போதை மாநிலமாக உருவாகிவிட்டது.
மாணவர்களே, இளைஞர்களே… போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். உதயநிதி போதைக்கு எதிராக உறுதிமொழி எடுக்கிறார். எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின் இப்படி பேசுவதான் மூலம் என்ன பயன்? ஆனால், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிவிட்டனர் என்பதை முதல்வர் ஸ்டாலினே ஒப்புக்கொண்டுவிட்டார். நாங்கள் சொல்லும்போதே தடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
இப்போது எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். கூடுதலாகப் பெறும் தொகை முழுக்க மேலிடம் செல்வதாக டாஸ்மாக் பணியாளரே சொல்கிறார், அந்த மேலிடம் யார் என்பது உங்களுக்கே தெரியும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விசாரித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியே வசூலிக்கிறார்கள். அப்போதும் மின்சார வாரியம் கடனில்தான் தத்தளிக்கிறது. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான்.
விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. ஏழை நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம்.
ஆனால், முதல்வருக்கு அவரது குடும்பத்தைப் பற்றி மட்டுமே சிந்தனை. அவர் நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. 51 மாத காலத்தில் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனா, புயல், வறட்சி ஆகியவற்றிலும் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டது அதிமுக அரசு. எம்ஜிஆர், ஜெயலலிதா ஏழைகளை நேசித்தார்கள். எப்போதெல்லாம் துன்பம் ஏற்படுகிறதோ, அதிலிருந்து விடுபடும் அளவுக்கு ஆட்சி செய்தார்கள்.
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. தினமும் கொலை நிலவரம்தான் செய்திகளில் வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து மக்களிடம் வந்திருக்கிறார் முதல்வர். வீடு வீடாக அதிகாரிகள் வருகிறார்கள். மக்களிடம் இருக்கும் 46 பிரச்சினைகள் பற்றி மனு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். 46 பிரச்சினைகள் மக்களுக்கு இருப்பதையே முதல்வர் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். இன்னும் 7 மாதத்தில் ஆட்சி முடியப்போகிறது. அதற்குள் நிறைவேற்ற முடியுமா?
நான்கு ஆண்டுகள் தூங்கிவிட்டு தேர்தல் வருவதால் தந்திரமாக ஏமாற்றுகிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு வாங்கப்பட்ட மனுக்கள் திருப்புனவத்தில் ஆற்றில் வீசி எறியப்பட்டுள்ளது. எந்தளவுக்கு மக்களை மதிக்கிறார்கள் என்று பாருங்கள். இவர்களா மக்களை காப்பாற்றுவார்கள்?
கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம். கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். மாணவர்கள், தொழிலாளர்கள், மக்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் அதிமுக ஆட்சியில்தான் நன்மைகள் கிடைக்கப்பெற்றது.
ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். திருப்பரங்குன்றம் தொகுதியில், 24 மணிநேரம் அரசு மருத்துவமனை, பள்ளிகள் தரம் உயர்த்துதல், முல்லைப் பெரியாறு திட்டம், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு, பொறியியல் கல்லூரி, மருத்துவ ஆராய்ச்சி நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் என்று நிறைய திட்டங்கள் கொடுத்திருக்கிறோம்.
திருப்பரங்குன்றம் மலைக்கு ரோப் கார் வசதி செய்வதாக திமுகவினர் சொன்னார்கள். அதை செய்யவில்லை. கிரிவலப் பாதை மேம்படுத்தப் படும் என்றார்கள், செய்யவில்லை. அவனியாபுரம் பைபாஸ் முதல் நெல்பேட்டை வரை உயர்மட்ட பைபாஸ் பாலம் கட்டப்படும் என்றார்கள், செய்யவில்லை. விரகனூர் ரவுண்டானா உயர்மட்ட பாலம் கட்டுவோம் என்று சொன்னார்கள், செய்யவில்லை. திமுக ஆட்சியில் திருப்பரங்குன்றத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் விரைவுபடுத்தி முடித்துக்கொடுக்கப்படும்.
இந்தப் பகுதியில் மல்லிகைப் பூ சாகுபடி அதிகம் நடக்கிறது. சில காலகட்டத்தில் மல்லிகைப் பூ விலை வீழ்ச்சி அடைவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த விலை வீழ்ச்சியை சரிக்கட்ட உங்கள் ஆதரவுடன் அடுத்தாண்டு அதிமுக அரசு அமைந்ததும், இப்பகுதியில் மல்லிகை சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்” என்றார் இபிஎஸ்.
– கி.மகாராஜன், என்.சன்னாசி