காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே தனது 2 குழந்தைகளை கொலை செய்த தாய் மற்றும் ஆண் நண்பருக்கு சாகும் வரை சிறை தண்டனை அளித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொலை சம்பவம் குறித்த விவரம் வருமாறு: குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய்(30). இவர் தனியார் வங்கியில் பணி செய்து வருகிறார். இவருக்கு அபிராமி(25) என்ற மனைவியும் அஜய்(7) என்ற மகனும் கார்னிகா(4) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், அபிராமிக்கும் அருகாமையில் உள்ள பிரியாணி கடை ஊழியர் மீனாட்சி சுந்தரத்துக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் வெளியில் தெரியவர, அபிராமி வீட்டார் கண்டித்தனர்.
அதைத்தொடர்ந்து, கணவர் மற்றும் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தலைமறை வாக அபிராமியும் அவரது ஆண் நண்பரும் முடிவு செய்தனர். தான் வீட்டை விட்டு வெளியேறியதால் மனமுடைந்து தனது 2 குழந்தைகளுடன் விஜய் தற்கொலை செய்து கொண்டார் என்று ஊராரை நம்பவைக்கலாம் என்று கருதினர்.
அதன்படி, விஜய் மற்றும் 2 குழந்தைகளுக்கும் உணவில் தூக்க மாத்திரைகளை அதிகமாகக் கலந்து கொடுத்துள்ளார். இதில் குழந்தை கார்னிகா இறந்தார். அஜய் மயக்க நிலையில் இருந்துள்ளார்.
மறுநாள் காலையில், விஜய்க்கு எந்த பாதிப்பும் இல்லாததால், குழந்தைகள் தூங்குகின்றன என்று நினைத்து அலுவலகத்துக்குச் சென்று விட்டார். கணவர் சென்றதும், மயக்க நிலையில் இருந்த குழந்தை அஜய்யின் கழுத்தை நெரித்து அபிராமி கொலை செய்துள்ளார்.
பின்னர், அபிராமியும், மீனாட்சி சுந்தரமும் கோயம்பேடு சென்று தென்மாவட்டத்துக்கு பேருந்தில் சென்றனர். மாலையில் வீடு திரும்பிய விஜய், குழந்தைகள் இருவரும் இறந்து கிடப்பதைப் பார்த்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில் அபிராமி தலைமறைவானதற்கும், குழந்தைகள் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்தனர். அதன்படி செல்போன் சிக்னலை வைத்து அபிராமியையும், மீனாட்சி சுந்தரத்தையும் பிடித்து விசாரித்தனர்.
அப்போது குழந்தைகளைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். அதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ப.உ.செம்மல், குற்றம்சாட்டப் பட்ட அபிராமி, மீனாட்சி சுந்தரம் இருவருக்கும் சாகும்வரை சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தனது தீர்ப்பில், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யரின் கருத்துகளை உதாரணமாகக் காட்டிய நீதிபதி, ‘‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று நீதிமன்றம் செயல்பட முடியாது. அதேநேரம், இவர்களின் கொடுங்குற்றத்தை மன்னிக்கவும் முடியாது. ஆயுள் தண்டனை என்பது இவர்கள் செய்த குற்றத்துக்கு குறைவானது என்பதால் சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன்’’ என்றார். தீர்ப்பை கேட்டதும் நீதிமன்றத்தில் அபிராமி கதறி அழுதார்.