சிவகாசி: டெல்லியில் உச்ச நீதிமன்றம் இருப்பதால், அங்கு இருக்கும் காற்று மாசு அளவை வைத்து பட்டாசு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உச்ச நீதிமன்றம் இருந்திருந்தால் தீர்ப்பு வேறு மாதிரி வந்திருக்கலாம், என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.
”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” சுற்று பயணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சிவகாசி வட்டார பட்டாசு, தீப்பெட்டி, காலண்டர் உற்பத்தியாளர்கள், அச்சகம், பேப்பர் மெர்சென்ட் உரிமையாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கூட்டத்தில் தொழில் முனைவோர் வைத்த கோரிக்கை:
டான்பாமா தலைவர் கணேசன்: இந்தியா முழுவதும் பட்டாசு உற்பத்தி வெள்ளை பிரிவில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் சிகப்பு பிரிவில் உள்ளது. பட்டாசு உற்பத்தியை வெள்ளை பிரிவில் சேர்த்தால் விதிமுறைகள் எளிமையாவதுடன், ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் அரசு ஆவணங்களில் பட்டாசு தொழில் இழிவான மற்றும் அடிங்க அருவருக்கத்தக்க என வரையறை செய்யப்பட்டு உள்ளதை மாற்ற வேண்டும்.
மேலும் 148 ஆண்டுகளுக்கு பின் வெடிபொருள் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர உள்ளது. அதில் தேசிய பண்டிகைகளில் காற்று மாசு விலக்கு மற்றும் கட்டுப் பாடுகளை எளிமையாக்க வேண்டும். இதற்கு அதிமுக உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
பட்டாசு விற்பனையாளர் சங்க செயலாளர் ரவி துரை: தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகளுக்கு உரிமத்தை மார்ச் மாதத்திற்குள் புதுப்பித்து வழங்க வேண்டும். தற்காலிக கடைகளுக்களான உரிமத்தை தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னதாக வழங்க வேண்டும். பட்டாசு கடைகளுக்கு 50 மீட்டர் சுற்றளவில் வேறு பொது பயன்பாட்டில் இருக்க கூடாது என கட்டுப்பாடு விதிப்பதை தவிர்க்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
மாஸ்டர் பிரிண்டர் அசோசியேசன் சார்பில் பேசிய ஹரி: மூலப் பொருட்களுக்கும், உற்பத்தி பொருட்களுக்கும் இடையே உள்ள ஜிஎஸ்டி வேறுபாடுகளை களைய வேண்டும், என்றார்.
தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜெய்சங்கர்: சிவகாசியில் உள்ள தொழிற்சாலைகளில் 80 சதவீதம் சிறு குறு தொழில்கள் தான். கடந்த சில ஆண்டுகளாக சிறு தொழில்கள் வீழ்ச்சியில் உள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டில் 4,400 சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அதிகப்படியான மின் உயர்வு. மொத்த உற்பத்தி தொகையில் 25 சதவீதம் மின் கட்டணத்திற்கு செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது, என்றார்.
பட்டாசு உற்பத்தியாளர் ஆசைத் தம்பி: மொத்த காற்று மாசில் பட்டாசு 1 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆண்டுக்கு ஒரு நாள் வெடிக்கும் பட்டாசுக்கு தான் இவ்வளவு எதிர்ப்பு உள்ளது. விபத்து நடந்தால் உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு உதவுவதையும், மீட்புப் பணியை செய்வதை விடுத்து, கைதுக்கு பயந்து ஓடி ஒளிய வேண்டி உள்ளது. இதற்கு வெடிபொருள் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும், என வலியுறுத்தினார்.
பின்னர் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியதாவது: ”பட்டாசு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அரசு குறிப்பிட்ட அளவு தான் செயல்பட வேண்டி உள்ளது. பல தீர்ப்புகள் அரசுக்கு எதிராக வருகிறது. பட்டாசு பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், சிறப்பு வழக்கறிஞரை நியமித்து வாதடியது அதிமுக அரசு.
டெல்லியில் உச்ச நீதிமன்றம் இருப்பதால், அங்கு இருக்கும் காற்று மாசுவை வைத்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உச்ச நீதிமன்றம் இருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்து இருக்கலாம். தமிழகத்தை சேர்ந்தவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகி உள்ளதால் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம். சிவகாசியில் ரூ.10 கோடியில் தீக்காய சிகிச்சை பிரிவு, விருதுநகரில் ரூ.350 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி அமைத்தோம்.
பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் ஆட்சி மாற்றம் வந்த உடன் நாங்கள் கண்ட கனவுகள் எல்லாம் காணல் நீராக மாறிவிட்டது. இப்போது மருத்துவமனைகளில் மருத்தவர்கள், மருந்துகள் இல்லாமல் மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்து வருகிறது.
அதிமுக ஆட்சியில் 12 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி பெற்று தந்த நிலையில், நிலம் கையகப்படுத்தப்படாததால் அத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தொழில் வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் முக்கியம். பட்டாசு தொழிலுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால், அதிமுக எம்.பிக்கள் மூலம் மாநிலங்களவையிலும், மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்தும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.