சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பழனிசாமி, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக தலைமை உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதையடுத்து, பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதாக ஓபிஎஸ் அறிவித்தார். முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ‘‘அரசியலில் யாரும் எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை” என்று இந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளித்தார் ஓபிஎஸ்.
இதற்கிடையே, ஜி.கே.மூப்பனார் நினைவு தின நிகழ்வில் பங்கேற்காத அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனும், பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
இதற்கிடையே, அதிமுக ஒருங்கிணைப்புக்கு குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இதுகுறித்து 10 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கெடு விதித்தார். அந்த கெடுவும் கடந்த 15-ம் தேதி முடிந்தது.
இந்த சூழலில், செங்கோட்டையனுக்கு பதில் அளிக்கும் வகையில், சென்னையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய பழனிசாமி, ‘‘அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க வாக்களித்தவருக்கு, துணை முதல்வர் பதவி கொடுத்த பிறகும், அதிமுக அலுவலகத்தை தாக்கினார். அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க ஒருவர் 18 எம்எல்ஏக்களை கடத்திச்சென்றார். இவர்களை எல்லாம் எப்படி கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியும்?’’ என்று பேசியிருந்தார். இதற்கிடையே, செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், பழனிசாமி நேற்று டெல்லி சென்றிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நேற்று டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, இரவு 8 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க சென்றார். அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோரும் உடன் சென்றார். பின்னர் அமித் ஷாவும், பழனிசாமியும் தனியே கலந்துரையாடினர். இந்த சந்திப்பின்போது, “பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என்று அமித் ஷாவிடம் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக, டெல்லியில் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக அரசியல் சூழல், திமுக அரசு மீதான மக்களின் அதிருப்தி, தவெக தலைவர் நடிகர் விஜய்யின் செயல்பாடுகள், கூட்டணியை பலப்படுத்துவது, பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள், ஏற்கெனவே கூட்டணியில் உள்ள தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவற்றின் தற்போதைய பலம், பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவு, அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்தது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம் தொடர்பாக இருவரும் காரசாரமாக விவாதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.