சென்னை: அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வேலையில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்குப்பின் அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடமிருந்து அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் முறையாக கொள்முதல் செய்யாததால், நெல் மூட்டைகளுடன் பல நாட்கள் காத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. டெல்டா மாவட்ட விவசாயிகளின் வேதனைகளை புரிந்துகொள்ளாமல், அவர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்.
ஏற்கெனவே, மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்துக் கழகங்கள் அதிக அளவு கடன் வாங்கி திவாலாக உள்ள நிலையில், தற்போது நுகர்பொருள் வாணிபக் கழகத்தையும் பெரும் கடன் சுமையில் திமுக அரசு தள்ளி விட்டுள்ளது. திமுக அரசு முற்றிலும் செயலிழந்துவிட்டது. போர்க்கால அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: விவசாயிகளுக்கு அறுவடை இயந்திரங்கள் நியாயமான விலையில் வாடகைக்கு கிடைக்கவும், நெல் கொள்முதல் விரைந்து நடைபெறவும், நெல் மூட்டைகளை கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்க வழிவகை செய்ய வேண்டும்.
கிடங்குகளிலேயே அவற்றை எடை போட்டு கொள்முதல் செய்யவும், மூட்டைக்கு கமிஷன் வாங்கப்படுவதை தடை செய்யவும் வேண்டும். இதன்மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: டெல்டா மாவட்டங்களில் 4 லட்சத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகள் 10 நாட்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றன. கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகளும் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாததால் கொள்முதல் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன. ஆனால், நிலைமையை சரிசெய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. எனவே தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சாமிநடராஜன்: நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. உடனடியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்குகளிலும், தேவையேற்பட்டால் திறந்த வெளி கிடங்குகளிலும் சேமிப்பதற்கான பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். தேவையான இடங்களில் நடமாடும் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.