சென்னை: தவெக தலைவர் விஜய், தனது சுற்றுப்பயணத்தை டெல்டா மாவட்டத்தில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளார். அவருக்காக நவீன வசதிகளுடன் பிரச்சார வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய், அண்மையில் மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி முடித்தார். இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தவெகவின் இரண்டு மாநாடுகளையும் வட மற்றும் தென் மாவட்டங்களில் நடத்திய நிலையில், தனது சுற்றுப்பயணத்தை செப்டம்பர் 2-வது வாரத்தில் டெல்டா மாவட்டங்களில் இருந்து தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவரது சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், விஜய்யின் சுற்றுப்பயணத்துக்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய நவீன பிரச்சார வாகனம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த வாகனத்தில் விஜய்யின் புகைப்படம் மற்றும் கட்சியின் கொள்கைகள் தொடர்பான வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தொழில் பாதுகாப்பு: இதனிடையே விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால், தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவுக்கு மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அவர்களுடன் தவெக எப்போதும் துணை நிற்கும். மேலும், தொழில் மற்றும் வேலை வாய்ப்பை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொருளாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுத்து தமிழக ஏற்றுமதியாளர்களையும், ஏற்றுமதி சார்ந்த தொழில்களையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.