திருச்சி: ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில், ஆசிரியர்களை தமிழக அரசு எக்காரணம் கொண்டும் கைவிடாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக அண்மையில் தரம் உயர்த்தப்பட்டன. இதில், திருச்சி கே.கே. நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியும் ஒன்று. இந்நிலையில், இப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வகுப்புகளை நேற்று தொடங்கி வைத்து, பள்ளியில் சேர்ந்த மாணவர்களை வரவேற்று புத்தகம், பேனா ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியது: தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள், டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைத்தவுடன் அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, பின்னர் மேல் முறையீடு செய்யப்படும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்களும் மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அதேவேளையி்ல், எக்காரணத்தைக் கொண்டும் ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் மு.மதிவாணன், பள்ளித் தலைமை ஆசிரியை எலிசபெத் ராணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்