சென்னை: டெட் தேர்வு வழக்கு தீர்ப்பில் இந்த மாத இறுதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய தலைவர் சி.கே.பாரதி, பொதுச்செயலாளர் சாவா ரவி, துணைத் தலைவர் அ.மயில், செயலாளர் அ.மாயவன், செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆசிரியர் தகுதித்தேர்வில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்தும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 23-ஐ திருத்துவது குறித்தும் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சரிடம் கோரிக்கை மனு சமர்ப்பி்க்கப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றத்தில் கூட்டமைப்பு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் நாடு முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. கட்டாயக் கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) குறிப்பிடவில்லை என்பது சீராய்வு மனுவில் சுட்டிக்காட்டப்படும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.