சென்னை: தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த 397 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2021-23-ம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ.1,068 கோடி மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர்கள் அணி துணைச் செயலாளர் இ.சரவணன், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநருக்கு கடந்த மே மாதம் புகார் அளித்துள்ளார்.
புகார் மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரியும், சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், தனது புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறிய லஞ்ச ஒழிப்புத் துறை, இது சம்பந்தமாக தன்னிடம் விசாரணை ஏதும் நடத்தவில்லை என்றும், பெயரளவில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்துவதற்கு பதில், வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் சார்பிலும் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி மற்றும் அரசுத் துறை அதிகாரிகளுக்கு எதிராக இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், அவர்களை பாதுகாக்கும் நோக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தனது புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஏற்கெனவே இதே கோரிக்கையுடன் அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த வழக்கையும், இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டார்.