சென்னை: டிடிவி தினகரன் வீட்டுக்குச் சென்ற அண்ணாமலை, அவரை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கூட்டணியில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறி ஓபிஎஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுளை முன்வைத்து தேஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், பாஜக தலைவராக அண்ணாமலை இருந்த வரை அனைத்தும் சரியாக சென்றது.
நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாள தெரியவில்லை என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதையடுத்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டனர். டிடிவி தினகரன், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக பேசி வந்த அண்ணாமலை, அவர்கள் மீண்டும் கூட்டணியில் இணைவார்கள் என நம்பிக்கை தெரிவித்து வந்தார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரனை விரைவில் சந்திப்பேன் என ஓரிரு நாட்களுக்கு முன்பு அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். இந்தச் சூழ்நிலையில், பாதுகாப்பு வாகனங்களை தவிர்த்துவிட்டு, மாற்றுக் காரில் அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு அண்ணாமலை வந்தார். அங்கு டிடிவி தினகரனுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சந்திப்பின்போது, கூட்டணியில் தொடர்ந்து இருக்குமாறு தினகரனை அண்ணாமலை கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
அப்போது, பழனிசாமியை தேஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்பதில் டிடிவி தினகரனும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. இதையடுத்து இரவு 8.30 மணிக்கு அண்ணாமலை புறப்பட்டுச் சென்றார். டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை, ஓபிஎஸ்-ஐயும் சந்தித்து பேசுவார் என்றும் விரைவில் டெல்லி சென்று அமித் ஷாவை சந்திப்பார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.