சென்னை: தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த மாதம் 31-ம் தேதியுடன் பணிஓய்வு பெற்றார்.
அடுத்த டிஜிபியாக சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர் ஆகிய 3 பேரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அவர்களுக்கு ஜூனியரான நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கடராமன், கூடுதலாக சட்டம் – ஒழுங்கு டிஜிபி பணியை கவனிப்பார் என உள்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணியை தமிழக அரசு தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் அடுத்த டிஜிபி நியமனம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. டிஜிபி அந்தஸ்தில் உள்ள 8 பேர் கொண்ட பட்டியல் ஏற்கெனவே மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு அனுப்பிவிட்டது.
இந்த கூட்டத்தில் சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோரில் ஒருவர் புதிய டிஜிபியாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், புதிய டிஜிபி விவகாரத்தில் தமிழக அரசு தீவிர பரிசீலனைக்கு பின்னரே முடிவு செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.