சென்னை: நாளையுடன் பணிஓய்வு பெறவுள்ள டிஜிபிக்கள் சங்கர் ஜிவால் மற்றும் சைலேஷ் குமாருக்கான பிரிவு உபச்சார விழா நேற்று நடைபெற்றது.தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நாளையுடன் (31-ம் தேதி) பணிஓய்வு பெறுகிறார். இதேபோல், மற்றொரு டிஜிபியான, தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்பரேசன் லிமிடெட் தலைவராக இருந்த சைலேஷ் குமார் யாதவும் நாளையுடன் பணிஓய்வு பெறுகிறார்.
இதையொட்டி இருவருக்கும் பணிநிறைவு பாராட்டு விழா மற்றும் பிரிவு உபச்சார விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் இதில் பங்கேற்று பாராட்டி பேசினர். இதையடுத்து, இருவருக்கும் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதை ஏற்றுக் கொண்டபின் சங்கர் ஜிவால் பேசும்போது நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் டிஜிபிக்கள், பிரமோத்குமார், சீமா அகர்வால், சந்தீப்ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னியபெருமாள், வெங்கடராமன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
பொறியியல் படிப்பை முடித்திருந்த இவர் 1990 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். மன்னார்குடி உதவி எஸ்பி, சேலம், மதுரை மாவட்ட எஸ்பி, திருச்சி காவல் ஆணையர், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குநர், உளவுப்பிரிவு டிஐஜி, ஐஜி, சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபி என போலீஸ் துறையில் பல்வேறு பதவிகளை வகித்தவர். அயல் பணியாக மத்திய அரசிலும் 8 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.
சென்னையின் 108-வது காவல் ஆணையராக 2 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். மெச்சத்தகுந்த பணிக்காக 2 முறை குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றவர். இந்நிலையில் 2 ஆண்டுகள் டிஜிபியாக பதவி வகித்த சங்கர் ஜிவால் நாளையுடன் பணிஓய்வு பெறுகிறார்.
தீ ஆணைய தலைவர்: தீ மற்றும் உயிர் மீட்பு பணிகளில் புதிய தொழில் நுட்ப நுணுக்கங்களை செயல்படுத்தும் நோக்குடன் தீ ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. அதற்கு தலைவராக சங்கர் ஜிவாலை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிஜிபி சங்கர் ஜிவால் பதவி காலம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் நிர்வாக பிரிவு டிஜிபியாக உள்ள வெங்கடராமன், நாளை முதல் சட்டம்-ஒழுங்கு பொறுப்பையும் கூடுதலாக கவனிக்க உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.