சென்னை: தமிழகத்தில் டிசம்பருக்குள் முழுமையான 4ஜி சேவை வழங்கப்படும் என தமிழக வட்ட பிஎஸ்என்எல் பொது மேலாளர் எஸ்.பார்த்திபன் தெரிவித்தார்.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் 92,600 பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் டவரை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். முன்னதாக, தமிழகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு சுமார் ரூ.245 கோடி மதிப்பீட்டில் 4ஜி டவர் அமைத்தல், பழைய டவர்களை மேம்படுத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டன.
அந்த வகையில் 7,545 எண்ணிக்கையில் 4ஜி டவர்கள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே யுஎஸ்ஓஎப் உதவியுடன் 4ஜி சேவை வழங்க 620 கிராமங்களும், தமிழக அரசு ஒத்துழைப்புடன் 188 வருவாய் கிராமங்கள், வனப்பகுதிகளில் உள்ள 21 கிராமங்கள் என 209 இடங்களில் 4ஜி சேவை வழங்கப்படவிருக்கிறது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 19 கிராமங்களில் உள்ள டவர்கள் 4ஜி-யாக தரம் உயர்த்தப்படுகின்றன. சேலம், கடலூர், வேலூர், மதுரை, ஈரோடு மாவட்டங்களில் அதிகப்படியான கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படும்.
சூரிய மின்சக்தி: நீலகிரி, சத்தியமங்கலம், கொல்லிமலை, ஏற்காடு, பச்சமலை, கல்வராயன்மலை உள்ளிட்ட தொலைதூர கிராமங்களுக்கு 4 ஜி சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 4ஜி டவர் உள்ள இடங்களில் தடையில்லா மின்சாரம் கிடைக்க சூரிய மின்சக்தியை ஆற்றலாகப் பயன்படுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை 254 டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.