சென்னை: காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்மல் மீது நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கும் வகையில், விஜிலென்ஸ் பதிவாளர் தனது விசாரணை அறிக்கையை நிர்வாக குழுவுக்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியின் பாதுகாவலராகப் பணியாற்றிவந்த காவல் துறையைச் சேர்ந்த லோகேஷ்வரன் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பூசிவாக்கம் பகுதியில் பேக்கரி நடத்தி வரும் லோகேஷ்வரனின் மாமனார் சிவக்குமாருக்கும், பேக்கரிக்கு வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலில் முடிந்தது.
இதுதொடர்பாக, இருதரப்பும் வாலாஜாபாத் காவல்நிலையத்தில் புகார் அளி்க்க, சிவக்குமார் மற்றும் லோகேஷ்வரன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்கில் காவலர் லோகேஷ்வரன் மற்றும் அவரது மாமனார் உள்ளிட்டோர் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறிய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியான செம்மல், காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில், மாவட்ட நீதிபதியான செம்மலுக்கும், அவரது பாதுகாவலராகப் பணியாற்றிய லோகேஷ்வரனுக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த வழக்கில் காஞ்சிபுரம் டிஎஸ்பியைக் கைது செய்ய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, காஞ்சிபுரம் எஸ்பி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை கடந்த செப்.9 அன்று விசாரித்த நீதிபதி என். சதீ்ஷ்குமார், காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க முதன்மை அமர்வு நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, டிஎஸ்பியை விடுவித்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளருக்கும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.சதீ்ஷ்குமார் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளர் தனது அறிக்கையை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, “மாவட்ட முதன்மை நீதிபதியின் உத்தரவின் பேரிலேயே உணவுப்பொருள் அதிகாரிகள் அந்த பேக்கரியை சோதனையிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இருதரப்பும் சமரசமடைந்து பரஸ்பரம் புகார்கள் முடித்து வைக்கப்பட்டபிறகு, மாவட்ட நீதிபதியின் அழுத்தம் காரணமாகவே போலீஸார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்” என்றார்.
வழக்கு முடித்து வைப்பு: அதையடுத்து நீதிபதி என். சதீ்ஷ்குமார், “இந்த விவகாரத்தி்ல் நிர்வாக ரீதியாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏதுவாக விஜிலென்ஸ் பதிவாளர் தனது அறிக்கையை உயர் நீதிமன்ற நிர்வாக குழு மற்றும் நீதிபதிகள் இடமாற்ற குழுவுக்கு அனுப்ப வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.