சென்னை: டிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் ஐயா வைகுண்டர் குறித்த பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கலியுகத்தை அழித்து உலகில் தர்மயுகத்தை ஸ்தாபிக்க அவதார மெடுத்த ஐயா வைகுண்டரை பற்றி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஆங்கிலக் கேள்வியில், ‘God of hair cutting’ என்று இழிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
தென்தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களால் போற்றப்படுபவரும், தெய்வீக நிலையை அடைந்தவருமான ஐயா வைகுண்டருக்கு தாய், தந்தை சூட்டிய பெயர் முத்துக்குட்டி என்பதாகும். ஆனால், மக்கள் அவரை ‘முடிசூடும் பெருமாள்’ என்னும் பெயரால் அழைத்தனர். எந்த மொழியிலும் பெயரை அப்படியே எழுதுவதுதான் வழக்கம்.
அப்படியிருக்கையில், பெயரை மொழிபெயர்த்து சொல்கிறேன் என்று மக்களால் தெய்வமாகப் போற்றப்படும் ஐயா வைகுண்டர் பெயரை இப்படி இழிவு செய்வது முறையா? இதே தேர்வில், தன் தந்தை குறித்தோ, அல்லது திமுக தலைவர்கள் குறித்தோ இப்படிப்பட்ட தவறுகள் நடந்தால், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசாமல் இருப்பாரா? தற்போது நடந்த இத்தவறு மிகவும் கண்டத்துக்குரியது. இதில் எந்தவொரு உள்நோக்கமும் இருக்காது என்று நம்புகிறோம். ஆனாலும், இந்தத் தவறைச் செய்தவர்கள் கண்டிக்கப்பட வேண்டியது அவசியம்.
மேலும், போற்றத்தக்க மகான்கள், தலைவர்கள் குறித்த கேள்விகள் மற்றும் பதிவுகளில் இன்னும் அதிக விழிப்போடும் கவனத்துடனும் இருப்பதையும், மீண்டுமொரு முறை, இதுபோன்ற தவறு நிகழாதிருப்பதையும் திமுக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், முன்னாள் எம்.பி. சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.