சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் எந்த அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது? என அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் முறைகேடு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், சீலை அகற்ற வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் , வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், டாஸ்மாக் முறைகேட்டுக்கும் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் திரைப்பட தயாரிப்பாளர் என்றும் அவரது 2 செல்போன் மற்றும் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
விக்ரம் ரவீந்திரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வி.கிரி மற்றும் அபுடுகுமார் ராஜரத்தினம், விக்ரம் ரவீந்திரன் டாஸ்மாக் ஊழியரோ எதுவுமே இல்லாத நிலையில் சம்பந்தமே இல்லாமல் அவரது வீடு மற்றும் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
இதனையடுத்து, எந்த அடிப்படையில், விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது? சீல் வைப்பதற்கு அமலாக்கத்துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது ? சோதனை நடத்தலாம், ஆவணங்களை கைப்பற்றலாம் ஆனால் எப்படி சீல் வைக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், அமலாக்கத்துறை சட்டத்தை பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் கூறினர். இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், சோதனை நடத்த சென்ற போது வீடு மற்றும் அலுவலகம் பூட்டியிருந்ததாகவும் அதன் காரணமாகவே சீல் வைக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், அமலாக்கத் துறையை தொடர்பு கொள்ளுமாறு நோட்டீஸ் ஒட்டப்பட்டதாகவும், ஆனால் ஒரு மாதம் தலைமறைவாக இருந்துவிட்டு தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், சோதனைக்கு சென்ற போது குறிப்பிட்ட நபர் இல்லையென்றால் போலீசார் உதவியுடன் கதவை உடைத்து சோதனை நடத்தியிருக்கலாமே? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, எந்த அடிப்படையில், இந்த விவகாரத்தில் இருவரையும், விசாரிக்க முடிவு செய்தீர்கள்? சீல் வைக்க என்ன அதிகாரம் இருக்கிறது? என்பது தொடர்பாக அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.