சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக எந்த அடிப்படையில் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது என்பது குறித்து பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இதுதொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களி்ல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவி்த்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக்கோரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், டாஸ்மாக்கில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளுக்கும், ஆகாஷ் பாஸ்கரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் திரைப்படத் தயாரிப்பாளர். அமலாக்கத் துறை அவரது 2 மொபைல் போன்கள் மற்றும் ஒரு லேப்-டாப்பை பறிமுதல் செய்துள்ளது என்றார்.
விக்ரம் ரவீந்திரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், விக்ரம் ரவீந்திரன் டாஸ்மாக் ஊழியரோ, டாஸ்மாக்குடன் தொடர்புடையவரோ கிடையாது. அப்படி இருக்கும்போது அவருடைய வீடு மற்றும் அலுவலகத்துக்கு அமலாக்கத் துறையினர் சீல் வைத்துள்ளனர். எனவே அந்த சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக்கோரப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், எந்த அடிப்படையில் விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது, சீல் வைக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா என கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத் துறை தரப்பி்ல் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், சோதனை நடத்த சென்றபோது விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகம் பூட்டிக்கிடந்தது. அதன் காரணமாகவே சீல் வைக்கப்பட்டது. அப்போது அமலாக்கத் துறையை தொடர்பு கொள்ளும்படி நோட்டீஸ் ஒட்டிய நிலையில் ஒரு மாதகாலமாக தலைமறைவாக இருந்துவிட்டு தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளார் என்றார்.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், சோதனைக்கு சென்ற இடத்தில் சம்பந்தப்பட்ட நபர் இல்லையென்றால் போலீஸாரின் உதவியுடன் கதவை உடைத்து சோதனை நடத்தியிருக்கலாமே என கேள்வி எழுப்பினர். பின்னர் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக எந்த அடிப்படையில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. எந்த அதிகாரத்தின் அடிப்படையில் சீல் வைக்கப்பட்டது என்பது குறித்து அமலாக்கத் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜ6ன் 17-க்கு தள்ளிவைத்துள்ளனர்.