மதுரை: மதுரை அரவிந்த கண் மருத்துவக் குழுமத்தின் முன்னாள் தலைவர் பி.நம்பெருமாள்சாமி (85) நேற்று காலமானார். அவரது உடல் தேனி அருகே சொந்த ஊரில் இன்று தகனம் செய்யப்படுகிறது. அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நம்பெருமாள்சாமி நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டு, அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான அம்பாசமுத்திரத்தில் இன்று (ஜூலை 25) நம்பெருமாள்சாமியின் உடல் தகனம் செய்யப்படுகிறது.
டாக்டர் நம்பெருமாள்சாமி அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவராகவும், கண் பராமரிப்பு அமைப்பின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். அரவிந்த கண் பராமரிப்பு அமைப்பின் தலைவர், ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் மற்றும் அரவிந்த்கண் மருத்துவ அறக்கட்டளை தலைவராகவும் பொறுப்பு வகித்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவப் பணியை தொடங்கிய இவர், நாட்டின் முதல் குறைந்த பார்வை உதவி மருத்துவமனையை 1967-ல் நிறுவினார்.
அரவிந்த் கண் மருத்துவமனையில் ரெட்டினா விட்ரியஸ் கிளினிக்கை 1979-ல் தொடங்கிய இவர், கிராமப்புறங்களில் கண் பார்வை சிகிச்சை மையங்களை மேம்படுத்தினார். அரவிந்த் மெய்நிகர் கண் மருத்துவ அகாடமியை நிறுவினார். டாக்டர் ஜி. வெங்கடசாமி கண் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவுவதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.
இவருக்கு 2006-ல் இந்திய மருத்துவக் கழகம் சார்பில் சிறந்த மருத்துவ ஆசிரியர் பிரிவில் டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டது. 2007-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நீரிழிவு விழித்திரை நோயால் ஏற்படும் குருட்டுத்தன்மை அதிகரித்து வருவது பற்றி ஆழ்ந்த கவலை கொண்ட இவர், அரிமா சங்கத்துடன் இணைந்து லயன்ஸ்-அரவிந்த் நீரிழிவு விழித்திரை நோய் இயல் திட்டத்தை தொடங்கினார்.
இவரது முன்முயற்சியால் டாக்டர் ஜி. வெங்கடசாமி கண் ஆராய்ச்சி நிறுவனத்துக்கான தனிக் கட்டிடம் மதுரையில் கட்டப்பட்டது. பல லட்சம் ஏழை மக்கள் பலனடையும் வகையில் கண் மருத்துவ சிகிச்சைக்கும், அதன் கட்டமைப்புக்கும் இதுபோன்ற பல்வேறு உதவிகளைப் புரிந்தவர் டாக்டர் நம்பெருமாள்சாமி. இவரது மறைவுக்கு ஆளுநர், முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்த தொலைநோக்குப் பார்வையாளர் நம்பெருமாள்சாமி மறைவால் வேதனையடைந்தேன். அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் அவர் வழங்கிய தன்னலமற்ற சேவை பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.
முதல்வர் ஸ்டாலின்: நாட்டின் முதல் விழித்திரை சிறப்பு மருத்துவர் என்ற புகழ்பெற்ற நம்பெருமாள்சாமியின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது. லட்சக்கணக்கான மக்களுக்குக் கண்பார்வை அளித்த இவரிடம் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்களும் மருத்துவர்களாகி ஏழை மக்களுக்குக் கண் சிகிச்சை அளித்து வருகின்றனர். நம்பெருமாள்சாமியின் மறைவு மருத்துவத் துறைக்கும், மதுரை மக்களுக்கும் பேரிழப்பாகும்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: அடித்தட்டு மக்களுக்கு பார்வை அளித்து பெரும் சேவையாற்றிய நம்பெருமாள்சாமியின் மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு பார்வை கிடைக்க செய்த நம்பெருமாள்சாமி காலமான செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மனிதநேயத்தின் அடையாளமாக வாழ்ந்து வந்த அவரது மறைவு தமிழ் சமூகத்துக்கு பேரிழப்பாகும். இதேபோல, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.