சென்னை: “அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரது உயர் கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரது உயர் கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐஐடி-க்கு உண்மையான பெருமையாக அமையும். அதற்காக நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதனிடையே, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், “ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலக்குறைவால் மறைந்த தந்தையின் கனவை தன் லட்சியமாகக் கொண்டு, விடாமுயற்சியின் மூலம் சென்னை ஐஐடியில் இடம்பிடித்திருக்கும் மாணவி ராஜேஸ்வரியின் உயர்கல்விப் பயணம் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.