சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் வருமான வரித் தொகை 36 கோடி ரூபாயில் இருந்து 13 கோடி ரூபாயாக குறைத்து, திருத்தியமைக்கப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்த இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி, தீபாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.