சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.36 கோடி வருமான வரி பாக்கியை செலுத்தக் கோரி ஜெ.தீபாவுக்கு வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2007ம் ஆண்டு வருமான வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள ரூ.36 கோடியை உடனடியாக செலுத்தும்படி கூறி அவரது சட்டப்பூர்வ வாரிசான ஜெ.தீபாவுக்கு வருமான வரித் துறை சார்பில் சமீபத்தில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நோட்டீஸை எதிர்த்து ஜெ.தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ.தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சத்தியகுமார், “முன்னாள் முதல்வரான ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லை. அவர் கடந்த 2007-ம் ஆண்டு செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாகக் கூறி ரூ.36 கோடியை உடனடியாக செலுத்தும்படி மனுதாரரான ஜெ.தீபாவுக்கு 18 ஆண்டுகள் கழித்து தற்போது வருமான வரித்துறை நோட்டீஸ் பிறப்பித்து இருப்பது இதுவரை இல்லாத நடைமுறை மட்டுமின்றி, புதிரானது.
ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிகளாக ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோர் இருக்கும்போது ஜெ.தீபாவுக்கு மட்டும் வருமான வரித்துறை நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே வருமான வரித்துறையின் இந்த நிலுவைத்தொகை தொடர்பாக மேல்முறை யீடு செய்து அதில் பல்வேறு சாதகமான உத்தரவுகளையும் பெற்றுள்ளார்.
தற்போது ஜெ.தீபா தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு நோட்டீஸ் கொடுப்பதாக இருந்தாலும் சட்டப்படி 15 நாட்கள் காலஅவகாசம் வழங்க வேண்டுமென்ற விதிமுறைகளையும் வருமானவரித் துறை புறம் தள்ளியுள்ளது. தற்போது இந்த தொகையை இத்தனை ஆண்டுகள் கழித்து உரிய காலக்கெடுவைத் தாண்டி வருமான வரித்துறையால் திருப்பிக்கோர முடியாது.
மொத்தத்தில் வருமான வரித் துறையின் இந்த நோட்டீஸில் சட்ட ரீதியாக பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இந்நிலையில், 7 நாட்களுக்குள் ரூ.36 கோடியை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை நோட்டீஸ் மூலமாக மனுதாரருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது. எனவே இந்த நோட்டீஸுக்கு இடைக் காலத் தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். பதிலுக்கு வருமான வரித் துறை சார்பில் இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது.
அதையடுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வருமான வரித்துறையின் இந்த நோட்டீஸுக்கும், மனுதாரருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் இடைக்காலத் தடை விதித்தார். மேலும், இந்த வழக்கில் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்.2-க்கு தள்ளி வைத்துள்ளார்.