சென்னை: வன்னிய சங்க முன்னாள் தலைவர் மறைந்த ஜெ.குரு வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் கவுதமன் இன்று பதில் அளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜெ.குருவின் தாய் கல்யாணி, மகள் விருதாம்பிகை ஆகியோர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: வன்னியர் சங்க தலைவராகவும், பாமக எம்எல்ஏவாகவும் இருந்த காடுவெட்டியை சேர்ந்த ஜெ.குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க குடும்பத்தினரான நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். ஆனால், இயக்குநர் கவுதமன், எங்கள் அனுமதியின்றி ‘படையாண்ட மாவீரா’ என்ற பெயரில் குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் எடுத்துள்ளார்.
குரு இறந்தபோது, அவரது உடலைக்கூட பார்க்க விடாமல் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் எங்களை தடுத்தனர். அவரது மரணத்தில் எங்களுக்கு இன்னும் சந்தேகம் உள்ளது. இந்த சூழலில், ராமதாஸுக்கு மிகவும் நெருக்கமான கவுதமன் எடுத்துள்ள படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதில், குருவை தவறாக சித்தரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, எங்கள் அனுமதியின்றி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை திரையிட கூடாது என தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதா, இதுதொடர்பாக இயக்குநர் கவுதமன் இன்று பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.