சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின், அரசுமுறை பயணமாக கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார். சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் நேற்று காலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் என பலரும் புத்தகம் வழங்கி முதல்வரை வரவேற்றனர்.
பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளில் நான் மேற்கொண்ட பயணங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக, வெற்றிப் பயணமாக இது அமைந்துள்ளது. இதில்தான் மிக அதிக அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. உயர்கல்வி, சிறுதொழில் போன்ற துறைகளில் 6 அமைப்புகள் நம்முடன் இணைந்து கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள உள்ளன. ஏற்கெனவே இருக்கும் 17 நிறுவனங்களும் நம் மாநிலத்திலேயே தொழிலை விரிவுபடுத்த முடிவெடுத்துள்ளன.பெருமைமிக்கதாகவும், மறக்க முடியாததாகவும் இந்த பயணம் அமைந்துள்ளது.
இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், ‘‘எதற்கு இந்த வெளிநாட்டு பயணம்? இங்கே இருக்கும் நிறுவனங்களை சந்தித்து பேசினால் போதாதா?’’ என்று கேட்டு புலம்புகின்றனர். ‘இந்த வெளிநாட்டு பயணம், ஸ்டாலினின் முதலீட்டுக்கானது’ என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சித்தது பற்றி கேட்கிறீர்கள். என்னை பொருத்தவரை, சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். பெரியார் பற்றி, அவரது உணர்வுகள் பற்றி அந்த நாட்டில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். ஜெர்மனியில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில், தமிழகம் பற்றி எடுத்து கூறியதும், ‘‘தமிழகத்தில் இவ்வளவு திறன், ஆற்றல் வளம் இருப்பது நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிகிறது. இனி தமிழகத்தைநோக்கி நிச்சயம் அதிக முதலீட்டாளர்கள் வருவார்கள்’’ என்று உறுதிபட கூறினர். ஜெர்மனியின் வடக்குரைன் வெஸ்ட்பாலியா (என்ஆர்டபிள்யூ) மினிஸ்டர் பிரெசிடென்ட் ஹெண்ட்ரிக் வூஸ்ட்டும் இதையேதான் சொன்னார்.
தமிழர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தேன். அவர்கள் அளவுகடந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்ய தயாராக உள்ளனர். அந்த நிலையை நேரடியாக பார்த்தோம். இதுபோன்ற தொடர்புகள், தொழில் உறவுகளை ஏற்படுத்தவே வெளிநாடுகளுக்கு சென்றேன். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான எங்களது வெளிநாட்டு பயணங்களும், இங்கே மேற்கொள்ளும் பயணங்களும் தொடரும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.
செங்கோட்டையனின் அதிமுக பதவிகள் பறிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘ஆக்கப்பூர்வமாக பேசும்போது, அக்கப்போராக கேட்கிறீர்களே’’ என்றார் முதல்வர். பின்னர், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த முதல்வருக்கு, வழிநெடுகிலும் திமுக தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: சென்னையில் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: செப்.11-ம் தேதி ஓசூர் சென்று, ரூ.2,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டெல்டா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஆட்டோமேட்டட் லேன் அமைப்பையும், பணியாளர் தங்கும் இடத்தையும் திறந்து வைத்து ரூ.1,100 கோடி மதிப்பில் புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளேன். ஏற்கெனவே தூத்துக்குடியில் நடத்தியதுபோல, ஓசூரிலும் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட உள்ளது. அங்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர இருக்கிறது. இவ்வாறு முதல்வர் கூறினார்.