சென்னை: “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ‘இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது’ என்று சொன்னாரா, இல்லையா? தற்போது உள்ள அதிமுகவினர், ஜெயலலிதாவின் வாரிசுகளா அல்லது அமித் ஷாவின் வழித்தோன்றல்களா? இவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள்?” என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகளை ‘சமூக நீதி’ விடுதிகள் என அறிவித்தமைக்காக சென்னை – திமுக தலைமையகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் மற்றும் விசிக எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் இன்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறும்போது, “பெரியார் வழியில் படிப்படியாக சாதி, மத அடையாளங்களை துடைத்தெறியும் வகையில் செயல்படும் முதல்வருக்கு பாராட்டை தெரிவித்தோம்.
அத்துடன், தேர்ச்சி பெற்ற 5,493 பேருக்கு கேங்மேன் பணி வழங்க வேண்டும், அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கணினி பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம்.
2026-ம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சாரத்தை திமுக – அதிமுக இரு கட்சிகளும் சற்று முன்னதாகவே தொடங்கியுள்ளன. இரண்டுமே கூட்டணி கட்சிகளின் அணிகளுக்கு தலைமை தாங்கக் கூடிய கட்சிகள். ஆளும் கட்சி மற்றும் ஆள விரும்பக் கூடிய கட்சி முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவது என்பது இயல்பு.
விசிகவுக்கு முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் தேவை இல்லை. உரிய நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்போம். திமுகவுடன் விசிக கூட்டணி எந்த நிலையில் உள்ளது என்று கேட்கிறீர்கள். இது சலித்துப்போன கேள்வி. மீண்டும் மீண்டும் இதே கேள்வியை எழுப்ப வேண்டாம். முதல்வர் உடனான இன்றைய சந்திப்பில் கூட்டணி குறித்து பேசவில்லை. எங்களது கோரிக்கைகள் தொடர்பாகவே சந்திப்பு இருந்தது.
கோவையில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி பிரச்சாரக் கூட்டம் பற்றி கேட்கிறீர்கள். இந்தப் பிரச்சாரத்துக்கான கூட்டம் என்பது எடப்பாடி பழனிசாமியின் தேர்தலுக்கான செயல்திட்டம். இதில் கருத்து கூற ஒன்றுமில்லை. அதிமுகவினர் வழக்கமான எதிர்க்கட்சியாக மக்களை சந்திக்கின்றனர். அப்போது, மக்கள் ஒன்று திரள்வது இயல்பு. ‘தமிழ்நாட்டை மீட்போம், மக்களை காப்போம்’ என்ற பிரச்சாரத்தை முன்வைத்துள்ள எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் வெற்றி பெற ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்துள்ளேன். அது ஓர் அரசியல் கடமை. அவ்வளவுதான்.
எடப்பாடி பழனிசாமி கோவை பிரச்சாரத்தில் பாஜக கூட்டணியில் முன்பு திமுக அங்கம் வகித்தது குறித்து பேசியது குறித்து கேட்கிறீர்கள். பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது தவறுகளை உணர்ந்தோம். அதனால்தான் மீண்டும் அந்த தவறுகளைச் செய்யவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ‘இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது’ என்று சொன்னாரா, இல்லையா? தற்போது உள்ள அதிமுகவினர், ஜெயலலிதாவின் வாரிசுகளா அல்லது அமித் ஷாவின் வழித்தோன்றல்களா? இவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள்?
தமிழகத்தில் அமைந்துள்ள கூட்டணி என்பது அதிமுக தலைமையிலான கூட்டணியா அல்லது பாஜக தலைமையிலான கூட்டணியா? அந்தக் கூட்டணியை தேசிய ஜனநாயக கூட்டணி என்று செல்கிறார்கள். அப்படியென்றால் அந்த அணிக்கு பாஜக தலைமை தாங்குகிறது என்பது தானே பொருள்.
என்னதான் இண்டியா கூட்டணியில் திமுக, விசிக இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான். அப்படி என்றால், அதிமுக கூட்டணிக்கு என்ன பெயர்? முதல்வர் வேட்பாளரை மோடி முடிவு செய்வார் என்றால், அதிமுக எந்த நிலையில் இருக்கிறது என்பது கவலைக்குரியதாக இருக்கிறது.
2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை இருமுனை போட்டிதான். திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும்தான் போட்டி. பலர் தனித்துப் போட்டியிடலாம், புதிய அணியை உருவாக்கலாம், புதிய கூட்டணியை கட்டமைக்கலாம். ஆனால், மக்களை பொறுத்தவரையில், திமுக அணியா அல்லது அதிமுக அணியா என்று மட்டுமே சீர்தூக்கி பார்ப்பார்களே தவிர, மற்றபடி மக்களின் கவனம் சிதறப்போவது இல்லை.
விஜய்யை போட்டியாக கருதவில்லையா என்று கேட்கிறீர்கள். எங்கு தேர்தல் நடைபெற்றாலும் அங்கு இருமுனைப் போட்டியாகவே இருக்கும். அதனைத்தான் சுட்டிக்காட்ட விரும்பினேன். தேர்தல் முடிவுகளுக்குப் பின் பார்ப்போம்.
கடலூரில் நடந்த ரயில் விபத்து என்பது மிகவும் கோரமான விபத்து. உயிரிழப்புகள் வருந்தத்தக்கது. முதல்வர் இதுகுறித்து தகவலறிந்து மிகவும் வேதனை அடைந்தார். மேலும், அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை சம்பவ இடத்துக்குச் செல்ல உத்தரவிட்டார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார். ரயில் விபத்துக்கான விசாரனை நடைபெறுகிறது. என்ன நடந்தது என்பதை கண்டறிந்து, அதற்கு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்” என்று கூறினார்.