திருநெல்வேலி: நெல்லை அருகே ஜெபம் செய்யச் சென்றவர்கள் மீது குங்குமம் பூசியதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் அலுவலக உதவியாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கீழக்கல்லூர், நடுக்கல்லூர் கிராமங்களுக்கு கடந்த 22-ம் தேதி வந்துள்ளனர்.
அவர்கள் கீழக்கல்லூர் பகுதியில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி, இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மகாதேவன், பாஜகவைச் சேர்ந்த அங்குராஜ் உட்பட 3 பேர் வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களில் சிலரை அருகிலிருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று, நெற்றியில் குங்குமம் பூசி, கடவுளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டுச் செல்லும்படி வற்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக ஆலங்குளத்தைச் சேர்ந்த டேவிட் நிர்மல்துரை என்பவர், சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘வழக்கறிஞராகவும், கிறிஸ்தவ சபைகளில் பிரசங்கம் செய்யும் ஊழியராகவும் உள்ளேன்.
பட்டக்கல்லூரை சேர்ந்த சிவபாக்கியம் என்பவரது அழைப்பின் பேரில், கீழக்கல்லூரில் உடல்நலம் குன்றிய அவரது உறவினருக்காக ஜெபம் செய்ய சென்றபோது, எங்களை வழிமறித்த 3 பேர் கொலை மிரட்டல் விடுத்ததுடன், வலுக்கட்டாயமாக நெற்றியில் குங்குமம் பூசி மத உணர்வுகளைப் புண்படுத்தினர்’ என்று தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து, வழக்கறிஞர் மணிகண்டன் மகாதேவன், அங்குராஜ் மற்றும் அவரது சகோதரரான சங்கர் ஆகியோர் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் அங்குராஜ் என்பவர், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் அலுவலக உதவியாளராக இருக்கிறார்.
இதற்கிடையில், வழக்கறிஞர் மணிகண்ட மகாதேவன் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், போதகர் டேவிட் நிர்மல்துரை, தங்களை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவராகவே பிள்ளையார் கோயிலில் இருந்த விபூதியை பூசிக்கொண்டு இந்து மதத்தை அவதூறாகப் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.