மாவட்டத்தின் முதன்மைப் பதவியை அண்மையில் பறிகொடுத்திருக்கும் ஆளும் கட்சி புள்ளி மீது அமலாக்க வலையில் சிக்கி இருக்கும் அதிமுக்கிய புள்ளி, தொடர் குற்றச்சாட்டுகளை தலைமைக்கு பட்டியல் போட்டிருந்தாராம். அதிமுக ‘பெல்’ பிரமுகருடன் ஸ்லீப்பிங் பார்ட்னராக இருந்து சில பல வேலைகளை செய்து வருவது குறித்தும் அந்தப் பட்டியலில் இருந்ததாம். தனக்கெதிராக அமலாக்கப் புள்ளி ஆதாரங்களை திரட்டுவது தெரிந்ததுமே, சாதி ரீதியில் சத்தான அமைச்சர் ஒருவரிடம் டோட்டல் சரண்டர் ஆகிவிட்டாராம் மாவட்டப் புள்ளி.
அமைச்சரின் கொங்கு விசிட்டின் போது விருந்தினர் மாளிகையில் அவரை தனக்கு நெருக்கமான சிலருடன் சென்று சந்தித்துப் பேசிய மாவட்டப் புள்ளி, “அவரை மீறி என்னால் அரசியல் செய்யமுடியவில்லை. எதைத் தொட்டாலும் குறுக்கே வந்து நிற்கிறார். நம்ம ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு.
இந்த முறை எப்படியாவது எனக்கு சீட் வாங்கிக் கொடுத்து அமைச்சராக்கி விடுங்கள். நான் அமைச்சராகிவிட்டால் அவரை இந்தப் பக்கமே வரவிடாமல் செய்துவிடலாம். எனது ஏரியாவில் உங்களுக்கு விசுவாசமா நான் இருப்பேன். ‘எதுவா’ இருந்தாலும் நம்ம பாத்து முடிவு பண்ணிக்கலாம்” என்று கண்கலங்கிச் சொன்னாராம்.
அமைச்சரும் ‘யாமிருக்க பயமேன்’ என்பது போல் மாவட்டப் புள்ளிக்கு தைரியம் சொன்னாராம். அதேசமயம் அமைச்சருடன் பேசப்பட்ட இந்த விவரங்களை அங்கிருந்த யாரோ ஒருவர் அப்படியே பதிவு செய்து அமலாக்க வலை புள்ளிக்கு பாஸ் செய்துவிட்டாராம். கூடுதல் ஆதாரத்தைத் தேடிக் கொண்டிருந்த அமலாக்க வலை புள்ளி, அந்த ஆடியோவை அப்படியே கொண்டு போய் சின்னவரிடம் போட்டுக் காட்டினாராம்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அமைச்சரை அழைத்துப் பேசியதாம் தலைமை. “எனக்கு ஒரே ஒரு நாள் டைம் கொடுங்கள்… அனைத்தையும் சரிசெய்துவிடலாம்” என்று சொன்னாராம் அமைச்சர். ஆனால், அந்த அவகாசத்தைக் கூட தராமல் மாவட்டப் புள்ளியின் பதவியை ஜெட் வேகத்தில் பறித்துவிட்டது தலைமை.