சிவகாசி: ஜூலை 9-ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் பங்கேற்பது என உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பொதுச்செயலாளர் சுரேஷ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் உயர்மட்டக் குழுக் கூட்டம் மாநிலத்தலைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன் தலைமையில் இணைய வழியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர், செயலர்கள் மற்றும் ஜே.ஏ.சி உறுபினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பொதுச்செயலர் சோ.சுரேஷ் கூறியதாவது: நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், தேசியக் கல்விக் கொள்கை – 2020-ஐ திரும்பப் பெறுதல், 8-வது ஊதியக் குழுவை உடனடியாக அமைத்தல், தொகுப்பூதிய முறையை ரத்து செய்து, நிரந்தர பணி நியமனங்கள் மேற்கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள், பொதுத்துறை ஊழியர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் சார்பில் ஜூலை 9 நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளன.
இந்த, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஜாக்டோ ஜியோ கலந்து கொள்வது என முடிவு எடுத்ததன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகமும் இதில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. கல்லூரி ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் உயர்கல்வித் துறை செயலரும், கல்லூரிக் கல்வி ஆணையரும், சங்க பொறுப்பாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகளுக்கு மாற்றுப்பணியில் செல்ல ஆணை வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்களில், மாற்றுத்திறனாளிகள், உடல்நலன் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள், 3 மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளவர்கள், ஏற்கனவே மாற்றுப் பணி சென்றவர்கள் உள்ளிட்டோரின் மாற்றுப் பணி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது” என்று சோ.சுரேஷ் கூறினார்.