சென்னை: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இஸ்ரோ ஜூலை 30ம் தேதி விண்ணில் செலுத்துகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் (NASA – ISRO Synthetic Aperture Radar) என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன. இதற்கான ஒப்பந்தம் 2014 செப்டம்பர் 30-ல் கையெழுத்தானது. அதன் பின்னர் இரு நாடுகளின் விஞ்ஞானிகள் கூட்டுழைப்பில் சுமார் 12,000 கோடி மதிப்பிலான நிசார் செயற்கைக் கோளின் தயாரிப்பு பணிகள் கடந்தாண்டு நிறைவு பெற்றன.
அதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனைகள் முடிந்த நிலையில், நிசார் செயற்கைக் கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகேட் டாவில் உள்ள 2-வது ஏவு தளத்தில் இருந்து ஜூலை 30-ம் தேதி மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதி கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த செயற்கைக் கோள் புவியில் இருந்து 743 கி.மீட்டர் தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
நிசார் புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட அதி நவீன ரேடார் செயற்கைக்கோளாகும். இதன் எடை 2,392 கிலோவாகும். இதன் ஆயுட்காலம் 3 முதல் 5 ஆண்டுகள். இது பூமியின் மாறிவரும் சூழல்கள் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும். இதன்மூலம், புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவ நிலை மாற்றங்கள், பேரிடர் மேலாண்மை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களை பெற முடியும். அதாவது, பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும்.
இந்த செயற்கைக்கோள் முழு பூமியையும் 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இரவு, பகல் என அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்கும். இதற்காக எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் செயற்கைக் கோளில் பயன்படுத்தப் பட்டுள்ளன. ஒரே செயற்கைக்கோளில் 2 அலைவரிசைகள் கொண்ட கருவிகள் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். மேலும், நிசார் அனுப்பும் தகவல்களை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களும் பெறமுடியும்.
இந்த திட்டத்தில் எல் பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார், ஒரு ஜிபிஎஸ் ரிசீவர், அதிக திறன் கொண்ட சாலிட்- ஸ்டேட் ரெக்கார்டர் (செயற்கைக் கோளின் ஹார்ட் டிரைவ்) மற்றும் ஒரு பேலோட் டேட்டா சப் சிஸ்டம் ஆகியவற்றை நாசா வடிவமைத்துள்ளது.
மறுபுறம், எஸ் பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார், செயற்கைக்கோள் பாகங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை இஸ்ரோ வழங்கியுள்ளது. மேலும், இந்த செயற்கைக்கோளை ஏவுவதற்கான ராக்கெட் மற்றும் இதர பராமரிப்புகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, நிசார் செயற்கைக் கோளை 2023ம் ஆண்டில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், செயற்கைக்கோள் உருவாக்கத்தில் தாமதம் ஏற்பட்டதால் ஏவுதல் தள்ளிப்போனது. தொடர்ந்து செயற்கைக்கோளில் உள்ள 12 மீட்டர் ரேடார் ஆண்டெனா ரிப்ளக்டரில் சில தொழில் நுட்பக் குறைபாடுகள் கடந்தாண்டு கண்டறியப்பட்டன.
அதாவது, ஆண்டெனா விண்வெளியில் பறக்கும்போது அதிக வெப்பத்தால் சேதமடைய வாய்ப்புள்ளது தெரிய வந்தது. அதன்பின் அவற்றை நாசா விஞ்ஞானிகள் சரி செய்தனர். அனைத்து பரிசோதனைகளும் சிறப்பாக முடிந்ததை அடுத்து செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Historic Launch Ahead: ISRO Set to Launch NISAR, a joint satellite with NASA !
On July 30, 2025 at 17:40 IST, ISRO’s GSLV-F16 will launch #NISAR, the first joint Earth observation satellite by ISRO & NASA, from Sriharikota.
NISAR will scan the entire globe every 12… pic.twitter.com/4Mry076XSZ
— ISRO (@isro) July 21, 2025