சென்னை: தனிநபர் ஆயுள், மருத்துவ காப்பீடுகளுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட ஜிஎஸ்டி சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேவேளையில், மாநிலங்களின் வருவாய் வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மன்றத்தின் 56-வது கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று, தமிழக அரசின் சார்பில் கருத்துகளை எடுத்துரைத்தார். அப்போது அவர், தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் மருத்துவ காப்பீடு சேவைகளுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட ஜிஎஸ்டி சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவித்தார்.
அதேநேரம் மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசியலமைப்பு திருத்தம் மூலம் தற்போதைய மேல்வரியை தொடரலாம் அல்லது ஜிஎஸ்டி சட்டத் திருத்தம் மூலம் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு மட்டும் உச்ச வரி வரம்பினை அதிகரிக்கலாம் என்றும் பரிந்துரைத்தார்.
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தீர்வு நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்கு, அலுவலர்கள் குழுவின் அறிக்கையை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இக்குழுவின் பரிந்துரைகளை இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் செயல்படுத்த ஜிஎஸ்டி மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்றுமதி மற்றும் தலைகீழ் வரி அமைப்பின் கீழ் தற்காலிகமாக ஜிஎஸ்டியை திரும்பப் பெறுவதற்கான தானியங்கி வழிமுறை, வணிகம் செய்வதை எளிமைப்படுத்துவதற்கான, சிறு இடர் அளவுரு கொண்ட வணிகங்களுக்கு எளிதாக்கப்பட்ட பதிவு முறையினையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.
உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களுக்கு இழப்பீட்டு மேல்வரி விதிக்கும் காலத்தை அக்டோபர் முதல் 2 அல்லது 3 மாதங்களுக்கு நீட்டிக்க சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றம் பரிந்துரைத்துள்ளது. எனவே, தமிழக அரசின் பரிந்துரைகளை ஜிஎஸ்டி மன்றம் பரிசீலிக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில், நிதித்துறை செயலர் த.உதயசந்திரன், தகவல் தொழில்நுட்வியல் துறை செயலர் பிரஜேந்திர நவ்னிட், வணிகவரி ஆணையர் எஸ்.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட சமூக வலைதளப் பதவில், “புதுடெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 56-வது கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்தின் சார்பில் கருத்துகளை முன்வைத்தேன்.
உயிர் காக்கும் மருந்துகள், ஆயுள் காப்பீடு, அத்தியாவசிய பொருட்கள் பலவற்றிற்கும் வரிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கின்ற அதே சமயத்தில், மாநிலங்களின் வருவாய் வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் அரசியல் சட்டத் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வரவோ அல்லது வேறு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தினேன்.
மேலும், ஏற்றுமதி மற்றும் தலைகீழ் வரி அமைப்பின் ( Inverted Duty Structure) கீழ் தற்காலிகமாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரியினை திரும்பப் பெறுவதற்கான (Provisional Refund) தானியங்கி வழிமுறையை வரவேற்றுப் பேசியதோடு, ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரித் தீர்வு நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்கு, அலுவலர்கள் குழுவின் அறிக்கையை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்” என்று அவர் கூறியுள்ளார்.