சென்னை: ஜிஎஸ்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்திருப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம் சிலர் விமர்சனத்தையும் முன்வைத் துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: ஜிஎஸ்டி வரி மீதான அடுத்த தலைமுறை சீர்திருத்த நடவடிக்கை மேற்கொண்டு, மிகச் சிறப்பானதொரு தீபாவளி பரிசை அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை வர வேற்கிறேன். தொலை நோக்கு பார்வையில் தலைமைத்துவம் வகிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: வரலாறு காணாத ஜிஎஸ்டி குறைப்பை அமல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நாட்டின் பொருளாதார உயர்வுக்கு ஏதுவாக புதிய ஜிஎஸ்டியை அளித்திருக்கும் மத்திய நிதி அமைச்சருக்கு பாராட்டு. இந்து வியாபாரிகள் நலச்சங்க துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார்: வணிகத்தை மேம்படுத்தும் மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை வரவேற்கிறோம்.
மாற்றத்துக்கு காரணம் என்ன? – மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்: கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டியின் வடிவமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தோம். ஆனால் எங்களின் கோரிக்கைகள் கேட்கப்பட வில்லை. இந்த மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது? மந்தமான வளர்ச்சியா? அதிகரிக்கும் குடும்பக் கடனா? குறையும் குடும்ப சேமிப்புகளா? பிஹார் தேர்தலா? டிரம்ப் மற்றும் அவரது வரி விதிப்புகளா? மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துமா?
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா: பேரமைப்பின் கோரிக்கை ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறது. அதேநேரம், அத்தியாவசிய உணவகங்களில் ஜிஎஸ்டி முழுமையாக அகற் றப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.