திருச்சி: திருச்சி சிறுகனூரில் நேற்று நடைபெற்ற மதிமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற மதிமுக பணியாற்றும்.
தமிழக வாக்காளர் பட்டியலில் வெளிமாநிலத்தவர்களை சேர்த்து தேர்தலில் ஆதாயம் அடைய முயற்சிக்கும் பாஜகவின் சதித் திட்டங்களை முறியடிக்க வேண்டும்.
ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறை இருந்தாலே அமைச்சர்கள், முதல்வர்களின் பதவியை பறிக்கும் வகையில் கொண்டு வந்த சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
ஜிஎஸ்டி வரியை மாற்றி அமைத்ததால் தமிழகத்துக்கு ஏற்படும் வரி இழப்பை மத்திய அரசு ஈடு கட்ட வேண்டும். இலங்கை அரசின் மீனவர்கள் விரோத செயல்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியின்படி, விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை தீர்மானித்து சட்டப்பூர்வமாக்குவதுடன், வேளாண் பயிர்களுக்கு தனிநபர் பயிர் காப்பீடு, வனவிலங்குகள் சட்டத்தில் திருத்தம் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
தமிழக அரசு அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களையும் ஒருங்கிணைத்து, ஒரு சங்கத்தின் உறுப்பினராக உள்ளவர்கள் எந்த ஒரு சங்கத்திலும் வேலைவாய்ப்பு பெற்று தொழில் செய்ய புதிய விதியை வகுக்க வேண்டும். தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.