சென்னை: ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின்கீழ், பால் பொருட்களின் விலையை குறைக்காத ஆவின் நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரிடம் தமிழக பால் முகவர்கள் நலச் சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி (கவுன்சில்) அலுவலகத்தில், ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் லோகநாதன் ரெட்டியிடம் தமிழக பால் முகவர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் நேற்று புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் யு.எச்.டி பால் மற்றும் பனீர் வகைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நெய், வெண்ணெய், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் ஆகவும், ஐஸ்கிரீம் வகைகளை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜிஎஸ்டி குறைப்பு செப்.22 முதல் அமலுக்கு வந்துள்ளதால், பால் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களும், ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை பொதுமக்களுக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் ஆவின் நிறுவனம் தற்போது வரை பால் பொருட்களின் விலையை குறைக்கவில்லை.
மேலும், முழுமையான விலைப்பட்டியலை வெளிப்படைத் தன்மையோடு வெளியிடவும் இல்லை. விலையை முழுமையாக குறைக்க வலியுறுத்தினோம். ஆனால், ஆவின் நிர்வாகமோ விலையை குறைக்க முன்வரவில்லை.
எனவே, மத்திய அரசும் ஜிஎஸ்டி கவுன்சிலும் ஆவின் நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆவின் நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்பி விசாரிப்பதாக ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் உறுதி அளித்துள்ளதாக பின்னர் பொன்னுசாமி தெரிவித்தார்.