சென்னை: பிரபல ஜவுளி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.31 கோடி ரொக்கம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் சிறிய ஜவுளி கடையாக தொடங்கப்பட்டு, தற்போது தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் கிளைகளைத் தொடங்கி, ஜவுளி, நகை வியாபாரங்களை பிரபல ஜவுளி நிறுவனம் செய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் கடந்த 12-ம் தேதி வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை தி.நகரில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம், ஜி.என்.செட்டி தெருவில் உள்ள ஜவுளி கடை, தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள கடை, குரோம்பேட்டையில் உள்ள நகை கடை, ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜவுளி நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர், நீலாங்கரையில் உள்ள உரிமையாளரின் மகன்கள் வீடு, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
4 நாட்களாக சோதனை: வரி ஏய்ப்பு புகாரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள், துணை ராணுவப்படை பாதுகாப்புடன் இந்த சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து 4 நாட்களாக நடந்து வரும் இந்த சோதனையில், பல்வேறு இடங்களில் தற்போது வரை கணக்கில் வராத ரூ.20 கோடி ரொக்கம், ரூ.11 கோடி மதிப்பிலான 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பல இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.