மேலக்கோட்டையூர்: விஐடி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு மேலக்கோட்டையூர் பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி, ‘சோதனைகளை சாதனைகளாக மாற்ற பழகிக்கொள்ள வேண்டும்’ என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆவதையொட்டி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்கலை.வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் முன்னிலை வகித்தார். இணை துணைவேந்தர் தியாகராஜன் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. கலந்து கொண்டார். முன்னதாக வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பயின்று பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் பணியாற்றும் 5 பேருக்கு சிறப்பு விருதுகளை கமல்ஹாசன் வழங்கி பாராட்டினார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது: வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றி இந்தியாவுக்கும் இந்த கல்வி நிலையத்துக்கும் பெருமை சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தோல்விகளை இறக்கி வைத்து விட்டு வெற்றியை சுமந்தவர்களாக இருக்கின்றனர். நீங்களும் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள். நம்முடைய தாய்மொழிதான் வணக்கத்துக்கு உரிய ஒன்று. திமிரோ, வீரமோ வணக்கத்துக்கு உரியது அல்ல.
உங்களின் முன்பு பேசுவது எனக்கு உத்வேகம் அளிக்கிறது. நான் கலையுலகத்தில் இன்றும் படித்துக் கொண்டும் கற்றுக் கொண்டும் இருக்கிறேன். சோதனைகளை சாதனைகளாக மாற்ற பழகிக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக வி.ஐ.டி. வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, “2010-ம் ஆண்டு 608 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட சென்னை வி.ஐ.டி.யில் தற்போது 23,000 பேர் படிக்கின்றனர்.
சென்னை, வேலூர், அமராவதி, போபால் ஆகிய 4 இடங்களிலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். மத்திய அரசு தனது மொத்த பட்ஜெட்டில் 2 சதவீதத்தை மட்டுமே கல்விக்காக ஒதுக்குகிறது. அதே நேரத்தில் தமிழ்நாடு அளவில் உயர்கல்வியில் நாம் முன்னேறி இருக்கிறோம்.
தமிழ்நாடு மாநில நிதி நிலை அறிக்கையில் மொத்த வருவாயில் 21 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கி உள்ளது. அதற்காக தமிழ்நாடு அரசை பாராட்டுகிறேன்’’ என்றார். துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் பேசும்போது ‘‘நான் நிறுவனங்களைச் சந்திக்கும் போதெல்லாம், எங்கள் மாணவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்பேன். மாணவர்கள் வெளிநாடு செல்லுங்கள், எந்த பிரச்சினையும் இல்லை.
அங்கு செல்லுங்கள், அங்கு கற்றுக் கொள்ளுங்கள், அங்கு சம்பாதித்து திரும்பி உங்கள் தாய்நாட்டுக்கு சேவை செய்யுங்கள். வேலை தேடுபவராக இருக்காதீர்கள். வேலை உருவாக்குபவராக இருங்கள்’’ என்றார். இந்த நிகழ்ச்சியில் இணை துணைவேந்தர் தியாகராஜன், கூடுதல் பதிவாளர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் விட்டா அமைப்பின் தலைவர் மனோஜ்குமார் நன்றி கூறினார். முன்னதாக கமல்ஹாசனிடம் மாணவ, மாணவியர் கேள்வி எழுப்பி பதில் பெற்றனர். நிகழ்ச்சிக்கு முன், சென்னை விஐடியில் சுதந்திர தினத்தையொட்டி விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.