சென்னை: சொந்த இடத்தில் கட்சிக் கொடியேற்ற வேண்டும் என மதிமுக தொண்டர்களுக்கு கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிகளை அகற்றுவதற்கு நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றப்படுகின்றன.
இந்நிலையில், நாமே முன்முயற்சி எடுத்து, கட்சிக் கொடிக் கம்பங்களை பாதுகாப்பாக அகற்றி, கொடி மற்றும் கம்பம் உள்ளிட்ட உடைமைகளை சொந்த இடங்களில் நிறுவ வேண்டும். அதனடிப்படையில், நேற்று முன்தினம் சென்னை, அண்ணாநகர் இல்லத்தில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு பொதுச்செயலாளர் வைகோவால் கொடியேற்றப்பட்டது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் அல்லது மக்கள் கூடும் பிரதான சாலைகளின் அருகில் சொந்த இடம் வைத்திருக்கும் நிர்வாகிகள், அங்கு கொடிக்கம்பம் அமைத்து கட்சிக் கொடியைப் பறக்கவிட விரும்பினால், அதற்கான உதவி தேவைப்பட்டால், மதிமுக அதற்கான செலவை ஏற்று, நிரந்தரமாக கொடியைப் பறக்கச் செய்ய உதவும். வீடுகள் தோறும் கட்சிக் கொடியேற்ற விரைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.