மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், சொத்து வரி முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இதற்கு பொறுப்பேற்று மேயர் பதவி விலகாமல் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே குரல் கொடுத்து வரும் அதிமுக, மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் கூட மேயர் பதவி விலக வலியுறுத்தாமல் அடக்கி வாசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த், வரி விதிப்புக் குழுத் தலைவர் விஜயலட்சுமி கணவர், 2 உதவி ஆணையர்கள் உட்பட 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் மட்டுமின்றி குடியிருப்பு கட்டிடங்கள் வரை சொத்துவரி முறைகேடு நடந்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைதான நிலையில், உடனடியாக மேயர் பதவி விலகவோ அல்லது கட்சித் தலைமை மண்டலத் தலைவர்களைப்போல் அவரை ராஜினாமா செய்யச் சொல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கணவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மனைவி இந்திராணி மேயராக தொடர்வது, மாநகராட்சி நிர்வாகத்துக்கும், திமுகவுக்கும் பெரும் பின்னடைவையும், இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ளது.
மேயர் பற்றி முடிவெடுக்கும் அதிகாரம், உள்ளூர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநகர் திமுக மாவட்டச் செயலாளர் தளபதி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு ஆகியோர் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், இவர்கள் கட்சித் தலைமைக்கு இதுவரை மேயரை பதவியை விட்டு நீக்க அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து திமுக கவுன்சிலர்கள் கூறியதாவது: சொத்து வரி முறைகேடு விசாரணைக்கு அழைக்கப்பட்ட வரி விதிப்புக் குழு தலைவர் விஜய லட்சுமியின் பதவி பறிக்கப்பட்டதோடு, அவரது கணவர் கண்ணனும் கைது செய்யப்பட்டார். அதேபோல், மேயர் இந்திராணியின் அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான், பொன் வசந்த் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார். மேலும், மாநகராட்சி நிர்வாகத்தில் பொன் வசந்த் தலையீடும், அவரே நிழல் மேயராக இருந்து வந்ததால்தான் சமீபத்தில் கட்சித் தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியது.
மேயர் இந்திராணி தொடர்ந்து பதவியில் நீடிப்பதன் பின்னணியில் உள்ளூர் கோஷ்டி அரசியல் முதல் திமுகவின் மேல்மட்ட அரசியலும் உள்ளது. அதனால், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையைப் பொருத்து கட்சித் தலைமை முடிவெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை இந்த முறைகேடு வழக்கில் குரல் கொடுத்துவந்த அதிமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தற்போது இந்த விவகாரத்தில் எந்தக் கருத்தும் சொல்லாமல் உள்ளனர்.
மார்க்சிஸ்ட் கட்சியாவது திமுக கூட்டணியில் இருப்பதால் அவர்கள் கருத்துச் செல்வதில் நெருக்கடி ஏற்படும் என அவர்கள் முன்பிருந்த வீரியத்தோடு இந்த வழக்கை தற்போது அணுகாமல் இருக்கலாம். ஆனால், சொத்தும்வரி முறைகேடுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு, ஆர்ப்பாட்டம் மற்றும் மாநகராட்சிக் கூட்டத்தில் மேயருக்கு எதிராக தர்னா செய்த அதிமுகவினர் , மேயர் கணவர் கைதுக்குப் பிறகு அடக்கி வாசிக்கத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் செல்லூர் கே.ராஜூ, அதிமுக கவுன்சிலர்கள் எந்தக் கருத்தும் சொல்லக் கூடாது, எப்படி இந்த வழக்கு செல்கிறது என்று பார்த்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் கூட, அவர் மேயருக்கும், இந்த வழக்குக்கும் உள்ள தொடர்பை விசாரிக்க வேண்டும் என்று பட்டும் படாமலும் கூறினார். அதனால், அதிமுக தரப்பும் இந்திராணியே மேயராக தொடர ஆதரவு தெரிவிக்கிறதா? என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது, என்று கூறினர்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜுவிடம் நேற்று கேட்டபோது. ”பொன் வசந்தால் தனிப்பட்ட முறையில் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்க முடியாது. மேயர் அதற்குப் பொறுப்பேற்று பதவி விலகுவதுதான் தார்மீகம் என்று வலியுறுத்தி வருகிறோம். நாளை (இன்று) இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. எக்காரணம் கொண்டும், இந்த வழக்கில் அதிமுக பின் வாங்காது” என்றார்.