சென்னை: சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் திமுக எம்.பி ஆ.ராசா நேற்று ஆஜரானார். முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி திமுக எம்.பி.யுமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக சிபிஐ கடந்த 2015-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகியோருக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், குற்றம்சாட்டப்பட்ட காலத்தில், ஆ.ராசா வருமானத்தைவிட ரூ.5 கோடியே 53 லட்சம் சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்டோர் நீதிபதி என்.வெங்கடவரதன் முன்பாக நேற்று ஆஜராகினர். அப்போது, இந்த வழக்கில் தன்னை இருந்து விடுவிக்கக் கோரி என்.ரமேஷ் தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து அந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சிபிஐ-க்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை குற்றச்சாட்டுப் பதிவுக்காக ஜூன் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.